Published : 18 Feb 2025 01:51 PM
Last Updated : 18 Feb 2025 01:51 PM
உதகை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்த நபரை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம், உதகையை சேர்ந்த சதாசிவம் மற்றும் பலர் கொடுத்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கோத்தகிரி ஊராட்சி அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணிபரிந்துவரும் கோத்தகிரி ஓரசோலை பகுதியைச் சார்ந்த மனோ என்பவர், தன்னையும் மேலும் 10 நபர்களையும் ஏமாற்றி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷாவிடம் உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து, எஸ்பி., நிஷா உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் விசாரணை செய்ததில் மனோ என்பவர், புகார்தாரரிடம் தான் கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவதாக பொய் சொல்லியும், பொய்யாக அடையாள அட்டை தயாரித்து காண்பித்தும் அவரது மகனுக்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவருக்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார்.
முன்பணமாக ரூ.2.50 லட்சம் பெற்றுக்கொண்டு தமிழக அரசால் வழங்கப்படும் வேலை உத்தரவு கடிதம் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை போலியாக தயாரித்து கொடுத்துள்ளார். புகார்தாரருடன் சேர்ந்து உதகையை சேர்ந்த 10 நபர்கள் எதிரிக்கு பணம் கொடுத்துள்ளனர். மொத்தம் ரூ.51 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் போலியான ஆவணங்களை கொடுத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே, நீலகிரி மாவட்ட பொதுமக்கள் யாரும் இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் பணம் கேட்டால் அவர்களை நம்ப வேண்டாம் எனவும், அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டாம் எனவும், இவ்வாறு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு இருந்தால் தயக்கம் இன்றி மாவட்ட காவல் அலுவலகத்தை அணுகி புகார் தரலாம் அல்லது மாவட்ட காவல் அலுவலகம் தனிப்பிரிவில் இயங்கிவரும் 97898-00100 மற்றும் 94981-01260 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT