Published : 17 Feb 2025 06:20 AM
Last Updated : 17 Feb 2025 06:20 AM
சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பி கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கம் அண்ணா சாலையை சேர்ந்தவர் குமரேசன் (73). பொறியாளரான இவர் மதுரவாயல், ராஜலட்சுமி நகரில் 1992-ம் ஆண்டு 4,800 சதுர அடியில் நிலம் வாங்கினார். அந்த இடத்தை 2022-ம் ஆண்டு சுத்தம் செய்ய சென்றபோது மற்றொரு நபர் அவருடைய இடம் என அபகரிக்க முயன்றதால், இதுகுறித்து நில அபகரிப்பு பிரிவில் குமரேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் குமரேசன் அவரது இடத்தை மீட்டெடுத்து சுற்றுசுவர் அமைத்துள்ளார். கடந்த மாதம் இந்த இடத்தை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது விருகம்பாக்கம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.என்.ரவியின் தம்பியும், நிலத்தரகர் சங்க மாநில தலைவரான வி.என்.கண்ணன் அந்த இடத்தில் மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டி உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் குமரேசன் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வி.என்.கண்ணன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வி.என்.கண்ணனை மதுரவாயல் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதையறிந்து அவரது ஆதரவாளர்கள் காவல் நிலைய வளாகத்தில் நேற்று மாலை திரண்டனர். விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் வேனில் அழைத்துச் சென்றபோது சங்க நிர்வாகிகள் வேனை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கலைத்துவிட்டு கைது செய்யப்பட்ட வி.என்.கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT