Published : 10 Feb 2025 09:01 AM
Last Updated : 10 Feb 2025 09:01 AM
திருமண மண்டபங்களில் டிப்டாப் உடையில் உறவினர்போல் நுழைந்து, மொய்ப் பணத்தை தொடர்ந்து திருடிவந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(60). இவர், கணவன் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது மூத்த மகனுக்கு மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் உள்ள வன்னியர் தருமபரிபாலன சங்க திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் வசூலான சுமார் ரூ.2 லட்சம் மொய்ப் பணம், 3 பவுன் தங்க நகைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் அடங்கிய கைப்பையை திருமண மண்டபத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு குடும்பத்துடன் ஈஸ்வரி குரூப் போட்டோ எடுத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மொய் பணம், தங்க நகை அடங்கிய கைப்பை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாக திருமண மண்டபம் மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி துப்பு துலக்கினர். இதில், திருமண மண்டபத்தில் மொய்ப் பணத் திருட்டில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் கிழக்கு சண்முகபுரம், கொள்ளிடம் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன்(53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், ஈஸ்வரி வீட்டு திருமண நிகழ்வு மட்டுமன்றி, கடந்த மாதம் 3-ம் தேதி சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபத்திலும் புருஷோத்தமன் மொய்ப் பணத்தை திருடியது தெரியவந்தது. திருமண மண்டபங்களில் டிப்டாப் உடை அணிந்து உறவினர்கள்போல் நடித்து, பொய்ப் பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி மொய்ப் பணத்தை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதும், இவர் மீது ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு என 5 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து மயிலாப்பூர் திருமண மண்டபத்தில் திருடிய ரூ.2 லட்சம், வெள்ளிப்பொருட்கள் மற்றும் சைதாப்பேட்டை திருமண மண்டபத்தில் திருடிய பணம் ரூ.57 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 57,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT