Published : 08 Feb 2025 06:30 AM
Last Updated : 08 Feb 2025 06:30 AM

சென்னை | முதியவரின் வங்கி பணம் ரூ.10 லட்சம் மோசடி: கல்லூரி மாணவி மீது போலீஸார் வழக்கு

சென்னை: முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்தை மோசடியாக எடுத்ததாக கல்லூரி மாணவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை அசோக் நகர், 19-வது அவென்யூவை சேர்ந்தவர் கலாவதி (74). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது கணவர் மணி (80). இவர்களது மகன் செந்தில் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கலாவதி மற்றும் அவரது கணவர் வயது முதிர்வின் காரணமாக வீட்டு வேலைக்காக ஆள் தேடினர்.

அப்போது, தெரிந்த நபர் மூலம், தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பி.காம். படித்துவரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவியை வீட்டு வேலைகள் செய்ய பகுதி நேரமாக பணியமர்த்தி இருந்தனர்.

வயது முதிர்வு காரணமாக கணவன், மனைவி இருவரும் வெளியே சென்று பொருள் வாங்குவது, ஏடிஎம்-மில் பணம் எடுப்பதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து, ஏடிஎம் கார்டு மற்றும் அதன் ரகசிய எண்ணை மாணவியிடம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன், மணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் செந்தில் குமார், அமெரிக்காவிலிருந்து வந்து, இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வீட்டில் தங்கினார்.

அப்போது, தந்தையின் செல்போனை பார்த்தபோது, அதில், குறுஞ்செய்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த, அவர் வங்கிக்கு சென்று தந்தையின் கணக்கு குறித்து விசாரித்தார்.

இதில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியிடம் விசாரித்தபோது, சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, இதுகுறித்து செந்தில் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x