Last Updated : 07 Feb, 2025 09:23 PM

 

Published : 07 Feb 2025 09:23 PM
Last Updated : 07 Feb 2025 09:23 PM

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் 916 பேர் மீது வழக்கு: 24,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கோப்புப்படம்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி 916 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று (பிப்.7) விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பள்ளி உடமைகள் திருடப்பட்டும், காவல்துறை வாகனங்களை தீவைத்து எரித்தும், சேதப்படுத்தியும், மாடுகளையும் திருடிச் சென்றனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தக் கலவர வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 58 பேர் மீதும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 858 பேர் மீதும் என மொத்தம் 916 பேர் மீது, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 666 பேர் மீது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களும், 53 இளம் சிறார்களுக்கு எதிராக, சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் காவல்துறை பாதுகாப்பிற்காக, சேலத்தில் இருந்து வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது தொடர்பாக 120-க்கும் மேற்பட்டோர் மீதும், பள்ளி வளாகத்தில் இருந்த பசு மாடுகளை திருடிச் சென்ற வழக்கில் 5 பேர் மீதும், 124 பேருக்கு எதிராக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை மிக விரைவில் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த முதல் கட்ட விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளி எனவும், 2-வது குற்றவாளி விசிகவைச் சேர்ந்த திராவிடமணி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தையை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இதுபோன்று வேறு எந்த வழக்கிலும் இந்த அளவிற்கு அதிகமாக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக சரித்திரம் இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x