Published : 01 Feb 2025 06:28 AM
Last Updated : 01 Feb 2025 06:28 AM
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை அபகரித்ததாக கணவன், மனைவி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகர் கோட்டம், திருமங்கலம் பகுதி நிர்வாக அலுவலரான பிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், ``முகப்பேரில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனையை சிலர் பொய்யான ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை எடுத்து வீட்டுமனையை மீட்டுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், மோசடியில் ஈடுபட்டது மதுரவாயலைச் சேர்ந்த துரைபாண்டியன் (64), திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜெகதீசன் (56), அவரது மனைவி தனலட்சுமி (53), முகப்பேர் நவீன்ராஜ் (35) ஆகிய 4 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
சென்னை மாநகரில், சொத்துகளை வாங்கும் நபர்கள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் மற்றும் வருவாய்த் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துகள் வாங்க காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT