Published : 28 Jan 2025 05:48 AM
Last Updated : 28 Jan 2025 05:48 AM
சென்னை: காதலிப்பதாக கூறி பள்ளி மாணவிகள் 3 பேரை அழைத்துச் சென்று 3 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 24-ம் தேதி, தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, மகள் காணாமல் போனது குறித்து திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஆகியோரும் மாயமானது தெரியவந்தது. 3 மாணவிகளையும் மாணவர்கள் 3 பேர், காதல் வலையில் வீழ்த்தி அழைத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இருப்பிடத்தை காட்டிய செல்போன்: இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் சம்பந்தப்பட்ட அனைவரது செல்போன் மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.
ஒரு ஐடிஐ மாணவர் மற்றும் சிறுமி யின் நண்பர்களான 16 மற்றும் 17 வயது மாணவர்கள் ஆகியோர் சேர்ந்துதான் மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளனர் என்று தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
காதலிப்பதாக கூறி 3 மாணவிகளையும் அந்த மாணவர்கள் கடந்த 24-ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அரசு நூலகம் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. அவர்களது நண்பர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். யாரேனும் நபர்கள் அந்த பகுதிக்கு வருகிறார்களா என்பதை அந்த நண்பர்கள் நோட்டம் விட்டுள்ளனர் என்றும் தெரியவந்தது.
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று மாணவிகளை வன்கொடுமை செய்தது தொடர்பாக 3 மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யுகேஷ், கலிமுல்லா உட்பட மொத்தம் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான யுகேஷ், கலிமுல்லா மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளன.
கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போக்சோ பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரு.வி.க. நகர் போலீஸாரிடம் இருந்து இந்த வழக்கு செம்பியம் மகளிர் போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 மாணவிகளும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக, அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT