Published : 27 Jan 2025 06:40 AM
Last Updated : 27 Jan 2025 06:40 AM
சென்னை: அரசு காப்பீடு திட்டம் ஏற்பாடு செய்வதாக கூறி மூதாட்டிகளிடம் நூதன முறையில் அடுத்தடுத்து நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். சென்னை வடபழனி, வடக்கு மாட வீதியில் வசித்து வருபவர் மூதாட்டி சுசிலா (67). இவர் கே.கே.நகர், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 16-ம் தேதி அந்த மருத்துவமனைக்கு ரத்த மாதிரி கொடுக்க சென்றார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் சுசிலாவிடம், ‘உங்களுக்கு அரசு காப்பீடு திட்டம் பதிவு செய்து தருகிறேன். இதன் மூலம் நீங்கள் இலவச சிகிச்சை பெறுவதோடு, பண பலனும் கிடைக்கும்' என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அங்குள்ள எஸ்பிஐ ஏடிஎம் அருகில் வைத்து, உங்களது தங்க நகைகளை கழட்டி ஒரு பையில் வைத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் காப்பீடு திட்டத்தில் பண உதவி கிடைக்காது எனக் கூறினார். இதை நம்பிய மூதாட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் அரை பவுன் தங்க மோதிரத்தை கழற்றி ஒரு பையில் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த நபர் ஒரு சிறிய நோட்டு புத்தகத்தில் கையெழுத்து போட வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து, தங்க நகைகள் அடங்கிய பையை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் சிறிது நேரம் இங்கே அமருங்கள் நான் இதோ வந்து விடுகிறேன் என கூறிவிட்டு நகை பையுடன் சென்றவர் திரும்பி வரவே இல்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீஸார் விசாரித்ததில், மூதாட்டி சுசிலாவிடம் நூதன முறையில் நகையை திருடிச் சென்றது மதுரை மாவட்டம் அரசரடி எல்லிஸ் நகரைச் சேர்ந்த சித்திரைவேல் (46) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் இவர் சுசிலாவின் நகையை திருடிச் சென்ற அதே தினத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் மூதாட்டி ஒருவரிடம் 3 சவரன் தங்கச்சங்கிலியை அவர் பறித்து சென்றது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT