Published : 27 Jan 2025 01:03 AM
Last Updated : 27 Jan 2025 01:03 AM

கோவில்பட்டியில் வீட்டில் நகை, பணம் திருட்டு: கொடைரோடு சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் 10 பேர் கைது

திண்டுக்கல்: கோவில்பட்டியில் வீட்டில் நகை, பணம் திருடிய கும்பலைச் சேர்ந்த 10 பேரை, கொடைரோடு சுங்கச் சாவடியில் துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மது சாலியபுரத்தைச் சேர்ந்தவர் முகம்மது சையது சுலைமான். இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு எதிரெதிரே 2 வீடுகள் உள்ளன. கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு முகம்மது சையது சுலைமான் தனது குடும்பத்துடன் பழைய வீட்டில் தூங்கினார். மறுநாள் காலை எழுந்து புதிய வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருட்டில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் கொடைரோடு சுங்கச்சாவடியைக் கடந்து செல்லவிருப்பதாக தென்மண்டல ஐ.ஜி.யின் தனிப்படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் 25-க்கும் மேற்பட்டோர் கொடைரோடு சுங்கச் சாவடியில் மறைந்திருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக 2 கார்களில் வந்த 10 பேர், கொடைரோடு சுங்கச்சாவடியை கடக்க முயன்றனர்.

அப்போது தனிப்பிரிவு போலீஸார் ஒரு காரில் உள்ளவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். மற்றொரு காரில் வந்தவர்கள் தப்ப முயன்றபோது, அங்கிருந்த லாரியில் மோதிய கார், சாலை மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த காரில் இருந்தவர்களை போலீஸார் விரட்டிச் சென்று, துப்பாக்கி முனையில் பிடித்தனர். அப்போது, காரை ஓட்டிய மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (35) என்பவர், தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், பிடிபட்ட 9 பேரை கைது செய்த போலீஸார், கோவில்பட்டிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x