Published : 26 Jan 2025 06:27 PM
Last Updated : 26 Jan 2025 06:27 PM
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி, மற்றொரு லாரி மீது மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு வெங்காய பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியை, மகராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே பந்தாபூர் பக்கமுள்ள கதிரியை சேர்ந்த நாராயணன் (45) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று 5.45 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே அத்திமரத்துப்பள்ளம் கிராமத்தின் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசைக்கு சென்றது.
அப்போது, அவ்வழியே ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை நோக்கி எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த லாரி மீது வெங்காய பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுநர் நாராயணன், மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அருள்ஜோதி (54) மற்றும் உடன் வந்த மாற்று ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மாடுகளை ஏற்றி வந்த லாரியில் வந்த ஆந்திர மாநிலம் நந்திபாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (31), காதர்பாஷா (56), விஜய் (38) ஆகிய 3 பேரும், வெங்காய லாரியில் வந்த மகராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பதாமி (40) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 34 மாடுகள் இறந்தன. படுகாயங்கள் அடைந்தவர்கள் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், செல்லும் வழியிலேயே பதாமி உயிரிழந்தார். விபத்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன், பர்கூர் போலீஸார், உயிரிழந்த நாராயணன், அருள்ஜோதி, மணிகண்டன் ஆகிய 3 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 34 மாடுகள் இறந்தன. 6 மாடுகள் காயங்களுடன் மீட்கப்பட்டது.
இந்த விபத்தில் மாடுகளை ஏற்றி வந்த லாரியின் பின்னால் வந்த கிரானைட் நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனமும் லாரி மீது மோதியது. இதில் உதிரிபாகங்கள் கீழே விழுந்தன. இதில் யாருக்கும் காயம் இல்லை. விபத்துக்குள்ளான லாரிகள் ஆங்காங்கே நொறுங்கி கிடந்ததாலும், வெங்காய லோடுகள் சிதறி கிடந்ததாலும் சென்னை - கிருஷ்ணகிரி சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கிரேன்களை வரவழைத்து விபத்துக்குள்ளான லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதியழகன் எம்எல்ஏ நேரில் ஆறுதல்: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்எல்ஏவுமான டி.மதியழகன் நேரில் சென்றார். அங்கு மீட்பு பணிகளை பார்வையிட்ட அவர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT