Published : 24 Jan 2025 12:53 AM
Last Updated : 24 Jan 2025 12:53 AM
வங்கி லோன் ஆப் மூலம் ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் 2023-ல் செல்போன் ஆப் மூலம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டி மேல் வட்டி சேர்த்து ஏறத்தாழ ரூ.3 லட்சத்தை திரும்பப் பெற்ற பேதியும், ஆண்ட்ரூஸை தொடர்ந்து மிரட்டியுள்ளனர். மேலும், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரது செல்போனில் உள்ள எண்களுக்கு அனுப்பி, தொடர்ந்து பணத்தைப் பறித்துள்ளனர்.
இது தொடர்பான புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தியதில், நாடு முழுவதும் 14 பேர் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய முகமது ஷபி ( 37) என்பவரை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில்
நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். அவரது 3 வங்கிக் கணக்கள் மூலம் ரூ. 10.65 கோடி பணம் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 3 செல்போன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகமது ஷபியுடன் தொடர்புடைய 13 பேரின் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதும், இந்தப் பணம் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ள சித்தன் முகேஷா என்பவரிடமிருந்து ஏற்கெனவே அமலாக்கத் துறை ரூ.331 கோடி பணத்தை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த முஜிப் என்பவர், ஏற்கெனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி லோன் ஆப் மோசடியில் தொடர்புடைய 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT