Last Updated : 21 Jan, 2025 04:56 PM

 

Published : 21 Jan 2025 04:56 PM
Last Updated : 21 Jan 2025 04:56 PM

‘சைபர் கிரைம்’ மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தரும் நபர்கள் - போலீஸ் எச்சரிக்கை

கோவை: கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, சைபர் கிரைம் மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தந்து, மோசடிக்கு உடந்தையாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரித்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப, சமீபத்திய நாட்களாக சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்தாண்டு கோவை மாநகரில், சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக 8,254 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 300 எப்.ஐ.ஆர் கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.93.95 கோடி தொகை மர்ம நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு சிலர் மர்ம நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை தொடங்கித் தந்து மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களது ஏஜென்ட்கள் மூலம், வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தர தகுந்த நபர்களை ஆன்லைன் வாயிலாக தேடிப்பிடிக்கின்றனர்.

ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பண ஆசை காட்டுகின்றனர். இதற்கு ஒப்புக் கொள்பவர்களிடம், அவர்கள் தொடங்கித் தரும் வங்கிக் கணக்கில் விழும் தொகைக்கு ஏற்ப 5 சதவீதம், 7 சதவீதம் என கமிஷன் தரப்படும் என ஆசை காட்டுகின்றனர். கமிஷனை நம்பும் நபர்கள், தங்களது அசல் ஆவணங்களை பயன்படுத்தி வங்கிகளில் தங்களது பெயரில் கணக்குகளை தொடங்குகின்றனர்.

பின்னர், வங்கிக் கணக்கின் பாஸ்புக், ஏடிஎம் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அவர்களிடம் இருந்து ஏஜென்ட்கள் மூலம் மோசடியாளர்கள் வாங்கிக் கொள்கின்றனர். தொடர்ந்து, தாங்கள் மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை இந்த வங்கிக் கணக்குகள் மூலம் பெற்று, தங்களது வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, ‘‘சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடும் மர்மநபர்களுக்கு, கமிஷன் அடிப்படையில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தந்த சிலர் சமீபத்தில் அடுத்தடுத்து மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடங்கித் தந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி பல கோடி பணத்தை நூதனமாக திருடியுள்ளனர். தொடர்ந்து திருடியும் வருகின்றனர். இறுதியில் வங்கிக் கணக்கை தொடங்கித் தந்த நபர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

எனவே, மோசடி நபர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தருவதை தவிர்க்க வேண்டும். மர்ம நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பக்கூடாது. அதுபோன்று யாராவது அணுகினால் உடனடியாக போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தவிர, http://cybercrime.gov.in/ என்ற இணையத்திலும் புகார் அளிக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x