Published : 20 Jan 2025 06:28 AM
Last Updated : 20 Jan 2025 06:28 AM
சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பெருமளவு தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன்கள் சில பயணிகளால் (கடத்தல் குருவிகள்) கடத்திவரப்பட உள்ளதாகவும், அவர்கள் சுங்கச் சோதனை இல்லாமல், சில அதிகாரிகள் உதவியுடன் வெளியில் செல்ல இருப்பதாகவும் சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படை அதிகாரிகள், சாதாரண உடையில் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிப்பகுதியில் நின்று கண்காணித்தனர். அப்போது, துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 2 விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் இருந்து இறங்கி, பயணிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை சுரங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர். மேலும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்தபோது, அவர்கள்,"நாங்கள் ஏற்கெனவே விமான நிலையத்துக்குள், சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு வெளியே வருகிறோம்.
நீங்கள் வெளியில் நின்று கொண்டு எப்படி எங்களை மீண்டும் சோதிப்பீர்கள்? "என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள், விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.
சோதனையில், 13 பயணிகளிடம் இருந்து சுமார் ரூ.1.5 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க பசைகள் மற்றும் ஐபோன்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், சுங்க அதிகாரிகள் சிலர் உதவியுடன் சோதனை இல்லாமல், இந்த கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்து வந்தது தெரியவந்தது.
துறை ரீதியான விசாரணை: இதில் சம்பந்தப்பட்ட சுங்கத்துறை கண்காணிப்பாளராக பணியில் இருந்த, பரமானந்த் ஜா, சரவணன் ஆதித்யன், சுனில் தேவ் சிங், டால்ஜீத் சிங் ஆகிய 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை கடற்கரை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்துக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்த 4 அதிகாரிகள் மீதும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT