Published : 20 Jan 2025 12:17 AM
Last Updated : 20 Jan 2025 12:17 AM
புதுக்கோட்டை: திருமயம் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க முயன்றதால், அதிமுக நிர்வாகி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி(56). அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றியச் செயலாளரான இவர் கடந்த 17-ம் தேதி அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வெங்களூர்- காட்டுப்பாவா பள்ளிவாசல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற லாரி மோதியதில், அந்த இடத்திலேயே ஜகபர் அலி உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், "திருமயம் பகுதியில் சட்டவிரோதமாக மலைகளை உடைத்து, இயற்கை வளங்களை சூறையாடியதற்கு எதிராக அரசு அலுவலர்களிடம் புகார் அளித்ததுடன், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தியதால், வலையன்வயலில் கல்குவாரி நடத்தி வரும் ராசு, ராமையா, அவர்களது நண்பர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் ஒருவர் உள்ளிட்டோருக்கும், ஜகபர் அலிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. எனவே, அவர்கள் மூலம் என் கணவர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும்" என்று அவரது மனைவி மரியம், திருமயம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார், புகாருக்கு உள்ளான 4 பேரைப் பிடித்து நேற்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜகபர் அலியை லாரி ஏற்றிக் கொன்றதாக, முருகானந்தம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றியதுடன், முருகானந்தம், ராசு, ராமையா உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் ஒருவர், மாநில சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தொகுதியில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், ஜபகர் அலி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"தமிழகத்தில் கனிமவள கொள்ளைக்கு எதிராக அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கிறது. இத்தகைய சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் இரா.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT