Published : 17 Jan 2025 08:56 PM
Last Updated : 17 Jan 2025 08:56 PM
திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் இன்று (ஜன.17) கைது செய்யப்பட்டனர். திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வங்கதேசத்தினர் ஏராளமானோர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வருவதாக தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் புகார் தெரிவித்து வரும் நிலையில், திருப்பூரில் கடந்த 11-ம் தேதி இரவு திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறைகேடாக தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை கோவை தீவிரவாத தடுப்பு கண்காணிப்பு குழுவினர் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக திருப்பூரில் பலர் தங்கியிருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்த நிலையில், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போலீஸார் தொடர்ந்து ஆவணங்களை பரிசோத்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக திருப்பூரில் இன்று (ஜன. 17) வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடமாநிலத்தவர்கள் போல் இருந்த 13 பேரை பிடித்து விசாரித்தனர். போலீஸார் விசாரணையில் 7 பேர் வங்கதேசத்தினர் என்பது தெரியவந்தது.
இம்ரான்ஹூசைன் (35), நூரன் அபி (43), ரப்பினி மண்டல்(35), ஷாஜகான்(32), மொக்டெர்(45), ரஃபிகுல் இஸ்லம்(30) மற்றும் கபீர் ஹூசைன்(37) ஆகிய 7 பேர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளர்களாக தங்கி வேலை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 பேர் மீது வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிந்து திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT