Published : 16 Jan 2025 10:55 AM
Last Updated : 16 Jan 2025 10:55 AM
சென்னை: பிரபல ரவுடி வெள்ளை உமா கொலை வழக்கு உட்பட 26 வழக்குகளில் தொடர்புடைய பாம் சரவணன் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்குகள் உள்ளன. இதில் 3 கொலை வழக்குகளில் இவரை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தலைமறைவான நிலையில் சென்னை காவல் துறை பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சரவணன் ஆந்திராவில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் ரவுடி பாம் சரவணனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையின் புறநகர் பகுதியில் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT