Published : 12 Jan 2025 03:52 PM
Last Updated : 12 Jan 2025 03:52 PM
மேடவாக்கம்: பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிகேணி, எல்லீஸ் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவரது மனைவி ஜோதி (27). இவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தற்போது முதல் மகன் ஜெகதீஷ் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் தஷ்வின் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்றாவது மகன் ஹரிஷ் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜோதி கணவனைப் பிரிந்து, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்னை மேடவாக்கம், புதுநகர் 4வது குறுக்கு தெருவில் வசித்து வந்துள்ளார். மேடவாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் பியூட்டிசியனாக வேலை செய்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் கணவன் மணிகண்டனின் அக்கா துளசியின் மருமகன் க்ரிஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தியுடன் (38) தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மணிகண்டன் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு பல முறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜோதி ஏற்கவில்லை.
இந்நிலையில் நேற்று ஜோதியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மணிகண்டன், தான் சபரிமலைக்கு சென்று வந்துள்ளதாகவும் பிரசாதத்தை தன் பிள்ளைகளுக்கு தர வேண்டும் எனக் கூறி உள்ளார். இதையடுத்து பள்ளிக்கரணை பகுதியில் ஜோதியைச் சந்தித்துள்ளார். அங்கு மணிகண்டன் ஜோதியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, மணிகண்டனை செருப்பால் அடித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதையடுத்து இரவு 8.40 மணி அளவில் மணிகண்டன் மேடவாக்கம் கூட்ரோடு அருகே இருப்பதை தெரிந்துகொண்ட ஜோதி, கிருஷ்ணமூர்த்தியை அழைத்துக் கொண்டு இருவரும் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. மது போதையில் இருந்த மணிகண்டன் தான் ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியை சரமாரியாக கழுத்து, தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டியுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் மணிகண்டனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காயம் அடைந்த ஜோதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்து விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து மேடவாக்கம் காவல்நிலைய போலீஸார் ஜோதி பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் மணிகண்டணை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT