Published : 12 Jan 2025 02:17 PM
Last Updated : 12 Jan 2025 02:17 PM

‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ செயலி - புகார் அளிப்போர் விவரம் ரகசியம் காக்கப்படும்

சென்னை: ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற செல்போன் செயலியை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்து, லச்சினையை அறிமுகப்படுத்தினார்.

தமிழக அரசு போதை பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. முதல்வரின் அறிவுறுத்தலின்படி, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதை பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2024 மே 16-ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதை பொருட்கள் இல்லாத தமிழகம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைய மூன்று வல்லுநர்கள் கொண்ட போதை பொருட்கள் இல்லாத தமிழகத்துக்கான இயக்க மேலாண்மை அலகு என்ற அமைப்பு தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றம் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். போதை பொருள் எதிர்ப்பு மன்றம் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பாக செயல்படும் போதை பொருள் எதிர்ப்பு மன்றத்தினை தேர்வு செய்து பரிசுகள் வழங்கிட மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் போதை பொருள் எதிர்ப்பு மன்றங்களை தேர்வு செய்யும்.

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதை பொருள் நடமாட்டம் குறித்த புகார்கள் அளிக்க ஏதுவாக புதிதாக “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற செல்போன் செயலியை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் நா. முருகானந்தம் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும். மேலும் போதை பொருள் இல்லாத தமிழகம் இயக்கத்துக்கான லட்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயலர் தீரஜ் குமார், உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (அமலாக்கப் பணியகம் குற்ற புலனாய்வுத் துறை) ஆ.அமல் ராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் எஸ்.பி.கார்த்திகா, போதை பொருட்கள் இல்லாத தமிழகம் இயக்க மேலாண்மை அலகு இயக்குநர் ஆனி மேரி சுவர்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x