Published : 04 Jan 2025 01:12 AM
Last Updated : 04 Jan 2025 01:12 AM
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து, அப்பள்ளியில் யுகேஜி பயின்ற சிறுமி உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவேசத்துடன் திரண்ட அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த தம்பதி பழனிவேல் (34) - சிவசங்கரி (32). இவர்கள், அங்கு பெட்டிக் கடை நடத்தி வருகிறனர். இவர்களது ஒரே மகள் லியா லட்சுமி (4). இச்சிறுமி அங்குள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யுகேஜி படித்து வந்தார்.
நேற்று பகல் 12 மணியளவில் உணவு இடைவேளையின் போது குழந்தைகள் வகுப்பறையை வெளியே வந்து பள்ளி வளாகத்தில் விளையாடி விட்டு, மீண்டும் வகுப்பறைக்குச் சென்றனர். வகுப்பு ஆசிரியை குழந்தைகளை எண்ணிவிட்டு லியா லட்சுமி இல்லாதை கண்டு மற்ற வகுப்பறைகளில் அமர்ந்துள்ளரா என தேடியுள்ளார்.
பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க்கின் தகரத்தால் ஆன மேல் மூடி உடைந்திருப்பதை கண்டு, அதனுள் பார்த்துள்ளனர். அங்கு சிறுமி லியா லெட்சுமி கிடப்பது தெரியவந்தது. உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .
இந்நிலையில் பழனிவேலுவின் தந்தை கார்மேகம், வழக்கம்போல் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து செல்ல வந்த போது, அவர் வெளியே வராததால் உள்ளே சென்று கேட்டுள்ளார். அப்போதுதான், சிறுமி லியா லெட்சுமி செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தது தெரியவந்தது.
இத்தகவல் உடனே பரவ, பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு கூடி, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.
இதற்கிடையே, சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை அவரது உடம்பில் சிராய்ப்பு காயங்கள் இல்லை; துணி ஈரமாக இல்லை. வேறு ஏதோ வகையில் குழந்தை இறந்துள்ளது. அதைக் கூறாமல் நிர்வாகம் மூடி மறைப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் அங்கு வந்து, ஆவேசமாக திரண்டிருந்த பெற்றோரை அப்புறப்படுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர் மாலை 4.15 மணியளவில் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தினர். இதையடுத்து 4.40 மணியளவில் அவர்கள் அங்கிருந்து கலைந்தனர். இதனால் 25 நிமிடங்கள் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சிறுமி இறந்ததை அறிந்த தொகுதி எம்எல்ஏ அன்னியூர் சிவா, சிஇஓ அறிவழகன் மற்றும் பலர் பள்ளிக்கு வந்து, நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூற, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT