Published : 04 Jan 2025 12:54 AM
Last Updated : 04 Jan 2025 12:54 AM
கன்னியாகுமரி அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாதர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் இளைய மகள் பிளஸ் 2 படிக்கிறார். இவர் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து விளையாட்டு அணியில் இடம்பெற்றிருந்தார். கடந்த 25-ம் தேதி 14 மாணவிகள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியையுடன், திருச்சியில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.
போட்டி முடிந்த பின்னர் மறுநாள் இரவில் மாணவிகள் ஊர் திரும்பியுள்ளனர். தன்னுடன் வந்த மாணவிகள் இரவில் அவரவர் வீட்டுக்கு சென்ற நிலையில், தொழிலாளியின் மகள் தனது தந்தைக்காக தக்கலை பகுதியில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பைசல்கான் (37) என்பவர், மாணவியிடம் பேச்சுக்கொடுத்து உதவி செய்வது போல் நடித்து, தனது வீட்டில் குடும்ப பெண்கள் அதிகமானோர் உள்ளனர். அங்கு வந்து கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவியை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு பைசல்கான் உட்படுத்தி உள்ளார். அங்கிருந்து தப்பி வந்த மாணவி, தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டு மாணவியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவியை வன்கொடுமை செய்த பைசல்கானை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதை திட்டமிட்டு போலீஸார் மறைத்து வருவதாகவும் மாதர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக, மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான லீமாறோஸ் கூறும்போது, “குமரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் மட்டும் குற்றவாளி கிடையாது. இதில் பலருக்கு தொடர்புள்ளது.. ஒருவரை மட்டும் பெயரளவுக்கு போலீஸார் கைது செய்துவிட்டு, பிற குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டு வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர்” என குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து, இவ்வழக்கில் தக்கலை பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT