Published : 01 Jan 2025 06:10 AM
Last Updated : 01 Jan 2025 06:10 AM
திருவள்ளூர்: திருநின்றவூர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 யானை தந்தங்களை நேற்று வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்து, விற்பனையில் ஈடுட முயன்று வருவதாக நேற்று சென்னை, வனவிலங்கு குற்றப்பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை வன விலங்கு குற்றப் பிரிவினர், யானை தந்தங்கள் கடத்தல், விற்பனை செய்பவர்களைப் பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து வன விலங்கு குற்றப்பிரிவினர், நேற்று திருநின்றவூர் பகுதியில் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த கும்பலிடம், அவற்றை வாங்குவது போல் நடித்து அவர்களை திருநின்றவூர்- கோமதிபுரம் பகுதிக்கு காரில் வர வைத்தனர். அப்போது, வன விலங்கு குற்றப்பிரிவின் ஒரு பகுதியினர், திருவள்ளூர் வன சரகர் அருள்நாதன், வன பாதுகாப்பாளர் முனுசாமி தலைமையிலான வனத் துறையினர் அருகில்கார்களில் மறைந்து இருந்தனர்.
இதனை அறிந்த கடத்தல்காரர்கள் காருடன் தப்பியோட முயன்றனர். அவர்களின், காரை துரத்தி சென்று, பிடித்தபோது, 2 பேர் தப்பியோடினர். கார் ஓட்டுநரான, காஞ்சிபுரம் மாவட்டம், இஞ்சமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் காருடன் சிக்கினார். தொடர்ந்து, காரை சோதனை செய்ததில், காரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான, 4 கிலோ எடை கொண்ட 3 யானை தந்தங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் வனத் துறையினர், உதயகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்து யானை தந்தங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT