Published : 29 Dec 2024 01:07 AM
Last Updated : 29 Dec 2024 01:07 AM
திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் உள்ள பண்ணை விடுதியில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சூரியலிங்கம் அருகே உள்ள பண்ணை விடுதியில், சென்னை வியாசர்பாடியில் வசிப்பதாகவும், குடும்பத்துடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும் கூறி, மகாகால வியாசர்(43), ருக்மணி பிரியா(45), ஜலந்தரி(18), முகுந்த் ஆகாஷ்(15) ஆகியோர் தங்கி உள்ளனர்.
இவர்கள், நால்வரும் நேற்று முற்பகல் வரை வெளியே வரவில்லை. இதையடுத்து, அவர்கள் அளித்த செல்போனை தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந்தேமடைந்த ஊழியர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது 4 பேரும் விஷமருந்திய நிலையில் கிடந்துள்ளனர். தகவலறிந்து வந்த திருவண்ணாமலை கிராமிய போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர்கள் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களது சடலங்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்த கடிதம், செல்போன்களை கைப்பற்றினர். ஒரு செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. ஆன்மிகத்தின் மீதான அதீத பற்றால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “விசாரணைக்குப் பிறகு முழு விவரமும் தெரியவரும். அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT