Published : 17 Dec 2024 06:30 AM
Last Updated : 17 Dec 2024 06:30 AM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். மீதம் உள்ள அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
முன்னதாக கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங் உயிர் தப்பினால் வீசுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அப்பு என்ற புதூர் அப்பு ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தனது வழக்கறிஞரிடம் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு சென்றார். அந்த வழக்கறிஞர் அந்த துப்பாக்கியை காசிமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள அப்புவிடம் விசாரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த தமிழரசன் (30), ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இதில், தமிழரசன் வீட்டிலிருந்தும் ஒரு நாட்டுத் துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடியான சம்போ செந்திலை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT