Published : 02 Dec 2024 03:44 PM
Last Updated : 02 Dec 2024 03:44 PM
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக கூறும் போலீஸார், “2022ல் 10,665 போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட 19 வெளிநாட்டினர் உட்பட 14,934 பேரிடமிருந்து 28,383 கிலோ கஞ்சா, 63,848 மாத்திரைகள், 98 கிலோ மற்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என புள்ளி விவரம் தருகிறார்கள்.
ஆனால், போலீஸ் இப்படி எல்லாம் கிடுக்குப் பிடி போடுகிறது என்றதும் போதை மாஃபியாக்கள் தங்களது ரூட்டை மாற்றி இருக்கிறார்கள். இப்போது, ஆட்கள் மூலம் சப்ளை செய்வதற்குப் பதிலாக செல்போன் ‘ஆப்’கள் மூலமும் ஆன்லைன் மூலமும் போதைப் பொருள் ‘சேவை’யை தொடர்கிறார்கள். குறிப்பாக, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகளை போதை வஸ்தாக பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகரித்துள்ளதாக போலீஸார் பதைபதைக்கிறார்கள்.
இந்த வகை மாத்திரைகள் ஐ.டி ஊழியர்கள், பள்ளி மாணவ - மாணவியர் மத்தியில் அதிகமாக புழக்கத்தில் இருப்பது இன்னுமொரு அதிர்ச்சி. எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை பிரத்யேக செயலிகளே இவற்றை இருக்கும் இடத்துக்கே கொண்டு வந்து சேர்த்துவிடுவதால் இதில் சிக்கி இருப்பவர்களுக்கு இன்னும் எளிதாகி விடுகிறது.
மித மிஞ்சிய போதை கிடைப்பதால் இந்த மாத்திரைகளை கட்டுக்கடங்காமல் பயன்படுத்தி வருகிறார்கள். “இப்படி இந்த மாத்திரைகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்கள் கூடிய சீக்கிரமே பலவீனமடைந்து எந்த வேலைக்கும் லாயக்கற்றவர்களாகி விடுவார்கள்” என்று அதிரவைக்கும் மருத்துவர்கள், “இது மூளைச்சாவு வரைக்கும் கொண்டுபோய்விடும் அபாயமும் இருக்கிறது” என்றும் எச்சரிக்கிறார்கள்.
இந்தவகை மாத்திரைகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் சில கண்ணிகளை வைத்ததும், போதை மாஃபியாக்கள் விழித்துக் கொண்டு, அவற்றை ஆன்லைனில் மொத்தமாக ஆர்டர் செய்து வைத்துக் கொண்டு அவற்றின் ஒரிஜினல் அடையாளத்தை மறைத்து வேறு பெயரில் ‘போதை சேவை’ செய்யப் பழகிவிட்டார்கள். மற்ற போதை வஸ்துகளை விட இதில் குறைந்த செலவில் நிறைந்த போதை கிடைப்பதாலும் வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுப்பதாலும் இதன் புழக்கம் அதிகரித்து வருகிறது.
வலி நிவாரணிகளை மொத்தம் மொத்தமாக விற்றால் சிக்கிக் கொள்வோம் என்பதால் ஆன்லைன் நிறுவனங்கள் சில ரகசிய குறியீடுகள் மூலம், போதும் போதும் என்கிற அளவுக்கு போதைக்கடை பரப்பி வருகின்றன. இவற்றை எல்லாம் போலீஸ் மட்டும் நினைத்தால் ஒழித்துவிட முடியாது. மத்திய - மாநில அரசுகள் இணைத்து கூட்டு முயற்சி எடுத்து ஆன்லைன் நிறுவனங்களையும் செயலிகளையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே இதை ஒழிக்க முடியும் என்கிறார்கள் சைபர் க்ரைம் போலீஸார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் கம்மிதான் என அறிக்கை தருகிறது டிஜிபி அலுவலகம். அது உண்மையாகவே இருந்தாலும் போதைப் பொருள் புழக்கத்தை மேலும் வளரவிட்டு வேடிக்கை பார்க்காமல் மத்திய - மாநில அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கட்டும்!
போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க ஆய்வு! - தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மது பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. போதைப் பொருள் மற்றும் மது நுகர்வோரின் சமூக பொருளாதார அடையாளம் மற்றும் பின்னணியை அறிதல், மது மற்றும் போதைப் பொருள் நுகர்வு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிதல், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்தல் ஆகியவை இந்த ஆய்வின் நோக்கமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT