Published : 22 Oct 2024 07:37 PM
Last Updated : 22 Oct 2024 07:37 PM
சென்னை: சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி நூதன மோசடி நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காவல் துறை சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி-யான சந்தீப் மித்தல் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் இது தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பல், பண்டிகை கால விற்பனையை குறிவைத்து, தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக கவர்ச்சிகரமான லாபகரமாகத் தோன்றும் விளம்பரங்களை வடிவமைக்கின்றனர்.
மக்கள் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது செல்போன் அழைப்பு மூலமாகவோ இவர்களைத் தொடர்புகொள்கிறார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுது பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர். இந்த இணையதளங்கள் வெளித்தோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும் இவை பணத்தைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்புப் பட்டியல்கள், விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களைக் காண்பிக்கும்.
பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்து காண்பிக்கப்படும். ஆனால், பணம் செலுத்தியவுடன், ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகிறார்கள். மேலும், இந்த வலைதளங்களிலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுறது. கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிக்காரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT