Published : 04 May 2024 06:15 AM
Last Updated : 04 May 2024 06:15 AM

ஆவடி | துப்பாக்கி முனையில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது: 703 கிராம் நகை, 4.3 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

ஆவடி: ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் நகைகள், பணம் கொள்ளை வழக்கில் ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 703 கிராம் நகைகள், 4.3 கிலோ வெள்ளிப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தன் வீட்டின் கீழ் தளத்தில் நடத்தி வரும் நகை மற்றும் அடகு கடையில் கடந்த மாதம் 15-ம் தேதி பகலில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து, பிரகாஷை மிரட்டி, கடையின் லாக்கரில் இருந்த சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புதிய தங்க நகைகள், அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து, தப்பி சென்றது. இச்சம்பவம் குறித்து, முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, 8 தனிப்படை போலீஸார் கொள்ளையரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கொள்ளையருக்கு தங்க இடம் அளித்து, மோட்டார் சைக்கிள்களில் நகை கடையை நோட்டமிட்டு, கொள்ளையில் ஈடுபட உதவியதாக சென்னை, பெரியமேட்டில் தங்கி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்( 26), ஷீட்டான் ராம்(25) ஆகியோரை கடந்த மாதம் 28-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் உதவியுடன், ராஜஸ்தான் மாநிலம்-சாங்கோர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, போலீஸார் 703 கிராம் நகைகள், 4.3 கிலோ வெள்ளி பொருட்கள், 2 ஐ-போன்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அசோக்குமார், சுரேஷ் ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவ்விசாரணையில், “அசோக்குமார் மீது ராஜஸ்தான் மாநில காவல் நிலையங்களில் போதை பொருள் வழக்கு, 2 அடிதடி வழக்குகள், 3 குற்ற வழக்குகள் என, 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சுரேஷ் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் தங்கி இரும்பாலான மேற்கூரைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நகைக்கடை கொள்ளையில் முக்கிய பங்கு வகித்துள்ள அசோக்குமார், சுரேஷ் ஆகிய இருவர், கொள்ளையடித்த நகைகள், பணத்தை, கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்துக்கு முன்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்பது தெரிய வந்துள்ளதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x