கொஞ்சம் அறிவியல்: முதல் வைரஸை துரத்திப் பிடித்த கதை!


கொஞ்சம் அறிவியல்: முதல் வைரஸை துரத்திப் பிடித்த கதை!
மொசைக் வைரஸ்: பிரதிநிதித்துவப் படம்

2020-ஐ வைரஸ் தாக்கிவிட்டது! அதனால், இந்த ஆண்டை நீக்கிவிட்டு மீண்டும் 'ரீ இன்ஸ்டால்' செய்தால் சரியாகிவிடும் என்றொரு 'மீம்' கண்ணில் பட்டது. கேட்க சுவாரசியமாக இருந்தாலும், கணினியிலிருந்து வைரஸை நீக்குவதுபோல் நிஜ உலகில் வைரஸை நீக்குவது அவ்வளவு எளிதல்லவே.

நுண்ணியதோர் உலகம்

கரோனா வைரஸ் இந்தியாவிலும் தொற்றத் தொடங்கிய பிறகு, வைரஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்படாத, கேட்காத, அஞ்சாத நாளே ஒருவருக்கும் இல்லை எனும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தம்மாத்தூண்டு வைரஸ் வகைகள் பற்றி மனித குலத்துக்கு எப்போது தெரியவந்தது? யார் இவற்றைக் கண்டறிந்தார்கள்? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்திருக்கும்.

பாக்டீரியா பற்றி, அது ஏற்படுத்தும் பிரச்சினைகள் பற்றிக்கூட அறிவியல் உலகத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெரிந்திருந்தாலும் வைரஸ் பற்றிக் கண்டறிந்தது என்னவோ 128 ஆண்டுகளுக்கு முன்புதான்.

முதல் கட்ட நுண்ணுயிரியல் ஆராய்ச்சிகள் பாக்டீரியா பற்றியே அதிகமும் நடைபெற்றன. வைரஸ் பற்றிக் கண்டறிவது அவ்வளவு எளிதாக இல்லை. அதற்குக் காரணம் வைரஸின் அளவுதான். இன்றைக்கும் வைரஸைக் கண்டறிவற்கான பரிசோதனைகள், வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டறிவது, சிகிச்சை மருந்து கண்டறிவது என எல்லாமே சிக்கலான விஷயங்களாகவே தொடர்கின்றன.

குட்டித் தெள்ளுப்பூச்சிகளைப் பார்த்திராவிட்டாலும், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு தெள்ளுப்பூச்சியின் அளவு 1.5 மி.மீ. அதாவது, ஒரு செ.மீ.க்கு 10 குட்டிக்குட்டி கோடு போட்டிருப்பார்கள் இல்லையா, அதில் ஒன்றரைக் கோடு அளவே இருக்கும். பாக்டீரியா அதைவிடச் சிறியது; ஒரு தெள்ளுப்பூச்சிக்குள் 10 ஆயிரம் கோடி பாக்டீரியாவை அடைத்துவிடலாம். அப்போ வைரஸ்? வைரஸ் அதைவிடவும் நுண்ணியது. ஒரு பாக்டீரியாவுக்குள் 10 ஆயிரம் வைரஸ்களை அடைக்கலாம். சுருக்கமாக, ஒரேயொரு முற்றுப்புள்ளிக்குள் லட்சக்கணக்கான வைரஸ்களை அடைத்துவிட முடியும். இந்தத் தக்கினியூண்டு வைரஸ்தான் உலகை இன்றைக்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

வைராலஜி

வைரஸ் வகைகள் பற்றி ஆராய்வது வைராலஜி என்றும், ஆராய்பவர்கள் வைராலஜிஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறார்கள். நுண்ணுயிரியல் துறையின் ஒரு பிரிவாக வைராலஜி உள்ளது. உலகிலுள்ள வேறு எந்த உயிர்ப்பொருளைவிடவும் வைரஸ் வகைகளே அதிகம். உலகில் லட்சக்கணக்கான வைரஸ் வகைகள் உள்ளன.

லத்தீன் மொழியில் விருலன்ட், விருலன்டஸ் (Virulent/Virulentus) என்றால் நச்சு என்று அர்த்தம். இதிலிருந்தே வைரஸ் என்ற சொல் உருவானது. தொற்றக்கூடிய நோய்க் கிருமி என்று இதற்குப் பொருள். கிட்டத்தட்ட தமிழிலும் இதேபோன்றதொரு பெயரே வைரஸுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. தமிழில் வைரஸை, தீநுண்மி என்று சிலர் மொழிபெயர்க்கிறார்கள். இது ஒருதலைப்பட்சமான மொழிபெயர்ப்பு.

இப்போதுவரை சுமார் 6,000 வைரஸ் வகைகள் பற்றி அறிவியல் விளக்கியுள்ளது. அந்த 6,000 வகைகளும் மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ தீமை செய்வதாக அறியப்படவில்லை. எனவே, எல்லா வைரஸுமே தீயது என்று முத்திரை குத்துவது சரியாக இருக்காது.

பிரிக்க முடியாதது!

பிரெஞ்சு நுண்ணுயிரியலாளர் லூயி பாஸ்தேர், பிரசவத்துக்குப் பிந்தைய பாக்டீரியத் தொற்று-காய்ச்சலால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைத்தது, கால்நடைகளைப் பாதிக்கும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியத் தொற்றுக்கும் ரேபிஸ் வைரஸுக்கும் தடுப்பு மருந்தைக் கண்டறிந்தது ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றவர். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் வைரஸ் பற்றி அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்பட்டிருக்கவில்லை.

பாக்டீரியத் தொற்று ஆராய்ச்சிகளில் அவர் கண்ட முன்னேற்றம், பரிசோதனைக்கூட நடைமுறைகள் போன்றவை இன்றுவரை தாக்கம் செலுத்தி வருகின்றன. ரேபிஸ் வைரஸுக்குத் தடுப்பு மருந்தை பரிசோதித்துப் பார்த்திருந்த பாஸ்தேரால், அந்த நோய்க்குக் காரணியான ரேபிஸ் வைரஸை தனியாகப் பிரித்தெடுக்க முடியவில்லை. அந்த நோயை ஏற்படுத்திய கிருமி அவ்வளவு நுண்ணியதாக இருந்தது. இன்றைக்கும்கூட எலக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே வைரஸைப் பார்க்க முடியும்.

இந்தப் பின்னணியில் மற்றொரு பிரெஞ்சு நுண்ணுயிரியலாளர் சார்லஸ் சேம்பர்லாண்ட் ஒரு வடிகட்டியைக் கண்டறிந்திருந்தார். அந்த வடிகட்டி எவ்வளவு நுண்ணியது என்றால், ஒரு திரவத்தில் உள்ள பாக்டீரியாவை அதைக்கொண்டு வடிகட்டிவிடலாம். பாக்டீரியாவின் அளவைக் குறித்து மேலே பார்த்திருந்தோம். அதையே வடிகட்டி எடுக்கும் அளவுக்கு 19 ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ந்திருந்தது.

பிரித்தாலும் புரியவில்லை

ரஷ்யத் தாவரவியலாளர் டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி மொசைக் வைரஸால் பாதிக்கப்பட்ட புகையிலைத் தாவர இலைகளை நுண்துகள்களாக்கி, மேற்கண்ட வடிகட்டி மூலம் 1892 இல் வடிகட்டினார். இந்த வடிகட்டுதல் மூலமாக அந்த இலைகளில் பாக்டீரியா ஏதும் இருந்திருந்தால் நீக்கப்பட்டிருக்கும். ஆனால், அதற்குப் பிறகும்கூட அந்த இலைகளில் இருந்து நோய்த்தொற்று முழுமையாக நீங்கியிருக்கவில்லை.

டிமிட்ரி இவனோவ்ஸ்கி

அதன் காரணமாக பாக்டீரியா அல்லாத வேறு ஏதோ ஒன்றுதான் நோய்க்குக் காரணம் என்று இவனோவ்ஸ்கி கருதினார். வடிகட்டிய பிறகு பாக்டீரியா இல்லாவிட்டாலும், பாக்டீரியா வெளியிட்ட நச்சின் எச்சம் அந்த இலைகளில் இருந்திருக்கலாம் என்று அவர் நினைத்தார்.

அப்படி அவர் நம்பியதற்குக் காரணம், அனைத்து நோய்த்தொற்றுக் கிருமிகளையும் பாக்டீரிய வடிகட்டியால் வடித்தெடுத்து, எடுக்கப்பட்ட சாரத்தை ஒரு ஊட்டச்சத்துப் பொருளில் வளர்த்தெடுத்து, குறிப்பிட்ட நோய்க்கிருமி எதுவென்று கண்டறிந்துவிட முடியும் என்று அந்தக் காலத்தில் நம்பப்பட்டதுதான். இன்றைக்கும்கூட இந்த முறைகள், சில வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

மொசைக் வைரஸ்: பிரதிநிதித்துவப் படம்

வெற்றி, வெற்றி!

அதேநேரம், இவனோவ்ஸ்கி மேற்கொண்ட பரிசோதனையை நெதர்லாந்து நுண்ணுயிரியலாளர் மார்டினஸ் பயரின்க், 1898 இல் மீண்டும் செய்து பார்த்தார். புகையிலை துகள் கரைசலில் இருந்து வடிகட்டப்பட்ட திரவத்தில் புதிய நோய்த்தொற்றுக் கிருமி இருக்கலாம் என்று அவர் கணித்தார். பிரிந்த செல்களில் மட்டுமே அந்தப் புதிய கிருமி பெருகியிருந்ததைக் கண்டறிந்தார். திரவத்தில் கரையக்கூடிய கிருமியாக அது இருக்கலாம் என்று கருதிய அவர், ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த வைரஸ் என்ற பெயரை, அந்தப் புதிய கிருமிக்கு அவர் சூட்டினார். அதன்பிறகுதான் வைரஸ் என்ற பெயர், கடந்த 128 ஆண்டுகளாக உலகில் பிரபலமாகத் தொடங்கியது. அவர் கண்டறிந்தது மொசைக் வைரஸ்.

மார்டினஸ் பயரின்க்

அதேநேரம் பயரின்க் கூறியதுபோல், வைரஸ் என்பது திரவத்தில் கரையக்கூடிய கிருமியல்ல, அது ஓர் நுண்துகள்தான் என்பதை அமெரிக்க வைராலஜிஸ்ட் வெண்டல் ஸ்டான்லி பின்னர் நிரூபித்தார். உலகில் முதலில் கண்டறியப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ், புகையிலை மொசைக் வைரஸ். இதுதான் உலகின் முதல் வைரஸ் கண்டறியப்பட்ட சற்றே சுருக்கமான கதை.

- மேலும் அறியலாம்...

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

WRITE A COMMENT

x