Published : 23 Mar 2020 09:49 AM
Last Updated : 23 Mar 2020 09:49 AM
விழுப்புரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 71 படுக்கைகளுடன் தனி மருத்துவமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதுவரை 396 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் 9 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நோய் அதிகமாக பரவாமல் தடுக்க சுய ஊரடங்கு நேற்று நடத்தப்பட்டது. இருப்பினும், இந்நோய் வேகமாக பரவி வருவதால், நோயால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
மாவட்ட எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் மருத்துவக் குழுவினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கரோனோவுக்காக தனி மருத்துவமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கெனவே பயிற்சியில் இருந்த சுகாதாரத் துறையினருக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். அதன்பிறகு, அங்குள்ள விடுதி அறைகள் முழுமையாக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 71 படுக்கைகள் கொண்ட இந்த தற்காலிக மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT