Last Updated : 22 Mar, 2020 07:53 PM

 

Published : 22 Mar 2020 07:53 PM
Last Updated : 22 Mar 2020 07:53 PM

கோயிலில் திருமணம் நடத்த அனுமதி மறுப்பு: சாலையோரத்தில் நின்று தாலி கட்டிய மணமகன்

சாலையோரத்தில் நின்று தாலி கட்டிய மணமகன்

கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தவர்களுக்கு கோயிலினுள் திருமணம் நடத்தத் தடை விதிக்கப்பட்டதால், மணமகன் கோயில் வாயிலில் நின்றவாறு மணமகளுக்குத் தாலி கட்டி அழைத்துச் சென்றார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு இன்று (மார்ச் 22) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கோயில்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, கோயில்களும் மூடப்பட்டன.

அதன்படி, கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மார்ச் 21 முதல் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணம் நடத்த 10 குடும்பத்தினர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் இன்று காலையில் கோயிலுக்குச் சென்றபோது, கோயில் நிர்வாகத்தினர் கோயிலினுள் பொதுமக்கள் வழிபாடு மற்றும் திருமணம் நடத்த இயலாது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமணம் நடத்த புரோகிதர்களும் வரமாட்டார்கள் எனத் தெரிவித்ததால், திருமண ஏற்பாட்டாளர்களுக்கும், கோயில் நிர்வாகத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்னர், திருமண ஏற்பாட்டாளர்கள் புரோகிதர்களின்றி, சாலையோரத்தில் கோயில் வாயிலில் நின்றவாறு, மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டித் திருமணம் நடைபெற்றது. அப்போது அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த உற்றார், உறவினர்கள் மலர் தூவி வாழ்த்துத் தெரிவித்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x