Published : 22 Mar 2020 07:14 PM
Last Updated : 22 Mar 2020 07:14 PM
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்ரமணியன் கோயிலில் திருமணம் நடத்த பதிவு செய்திருந்த 16 திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டபடி இன்று கோயில் நிர்வாகத்தினரின் கட்டுப்பாடுகளால் எளிய முறையில் கூட்டமின்றி நடந்து முடிந்தன
கரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் ஊரடங்கு இன்று (மார்ச் 22) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கோயில்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, கோயில்களும் மூடப்பட்டன.
அதன்படி, கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயிலில், 4 கால பூஜைகள் மட்டும் நடைபெறும். ஆனால் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மார்ச் 21 முதல் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. மேலும், கோயிலில் திருமணம் நடத்த பதிவு செய்யப்பட்டிருந்தவர்களின் திருமணங்கள் எளிய முறையில் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து.
அதன்படி, ஒரு திருமணத்துக்கு மணமகள் வீட்டார் தரப்பில் 5 பேரும், மணமகன் தரப்பில் 5 பேரும் என 10 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதோடு, மண்டபம், பிரகாரப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதையடுத்து, கோயிலில் திருமணம் நடத்த பதிவு செய்திருந்த திருமண வீட்டார் இன்று திட்டமிட்டப்படி கோயிலுக்கு வந்திருந்தனர். திருமணம் செய்யவிருந்த ஜோடிகளுக்கு கோயிலில் இருந்த அர்ச்சகர்கள் எளிய முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். 16 திருமணங்கள் நடைபெற்று முடிந்து அவரவர் திருமணம் முடிந்த கையோடு வெளியேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT