Published : 18 Mar 2020 01:54 PM
Last Updated : 18 Mar 2020 01:54 PM
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 31-ம் தேதி வரை உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் மூடப்படும் எனவும் தினமும் வழக்கம்போல் நான்கு கால பூஜைகள் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. தினமும் வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நிகழ்வுக்குப் பிறகு, அதிக அளவில் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரிய கோயிலுக்கு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா அச்சம் காரணமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கூட்டம் வெறிச்சோடிய நிலையிலும், தஞ்சைப் பெரிய கோயிலில் மட்டும் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று (மார்ச் 18) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம்போல பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள தஞ்சைப் பெரிய கோயிலை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், காலை 11 மணிக்கு கோயிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, மாராட்டா கோபுரத்தின் நுழைவு வாயிலில் விளம்பரம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயில் மூடப்பட்டது. கோயிலுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும், கோயிலில் நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என அறநிலைய மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதேபோல, தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் மூடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT