Published : 30 May 2016 03:46 PM
Last Updated : 30 May 2016 03:46 PM
ஆட்சிக்கு வருபவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் மக்கள் என்ன செய்யவேண்டும் என்று The shooter (2013) திரைப்படம் துணிச்சலாக கூறியுள்ளது.
ஆட்சியமைத்துள்ள கட்சி மக்களைத் திரட்டி பொதுக்கூட்டங்களில் பேசிய காட்சிகளும் மக்கள் உற்சாகமாக வரவேற்ற காட்சிகளும்தான் இப்படத்தின் ஆரம்பம். ஆட்சியமைத்தவுடன் அரசாங்க நடவடிக்கைகள் எவ்வளவு மும்முரமாக இயங்கத் தொடங்குகின்றன, அரசின் செயல்பாடுகள் உடனுக்குடன் மாறுபட்ட தன்மைகளோடு இயங்குவதை படத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்தக் காட்சிகளில் போகிறபோக்கில் உணர்த்தப்படுகின்றன.
ஆனால் அதன்பின்னரே திரைப்படம் எங்கெங்கோ பயணித்து ஒரு முக்கியமான புள்ளியில் நிலைகொள்கிறது. அது வேறொன்றுமில்லை. மக்கள் பிரச்சினைகளும் தேர்தல் வாக்குறுதிகளும் அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களும் ஒன்றிணையும் மையப்புள்ளிதான்.
டென்மார்க் தலைநகரம் கோபன்ஹெகன் நகரத்தையே தனியொருவனாக நின்று பீதியில் ஆழ்த்துகிறான் ஒரு தீவிரவாதி. ஆனால் அவன் யார்? எங்கிருந்து வந்திருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. முக்கியமான கூட்டங்களில் சில தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுதான் டென்மார்க் நாடு தன்னுடைய பிரச்சினைகள் என்னவென்றே சிந்திக்கத் தொடங்குகிறது.
அப்போது கூட தங்கள் பிரச்சினை என்னவென்று மக்களுக்கு நேரடியாக உரைக்கவில்லை. சிலர் கொல்லப்பட்டு சிலர் கொலையிலிருந்து தப்பித்தாலும்கூட அவர்கள் இலக்கு வைக்கப்பட்டு விட்டார்கள் என்பது பளிச்சென்று தெரிகிறது. இதன்பிறகு அரசாங்கமே அல்லோல கல்லோலப்படுகிறது.
நான்கு பக்கமும் காவல்துறையும் உளவுத்துறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலும், எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவரை தனியொருவனாகவே கடத்துகிறான் அந்தத் தீவிரவாதி.
இத்தனைக்கும் மியா மோயிஸ்கார்டு என்ற அந்தப் பெண்மணி சாதாரண பத்திரிகையாளர் அல்ல. ஆளும் கட்சியில் அமைச்சர் பதவியில் உள்ளவர்களை தனது தொலைக்காட்சியில் விவாதத்துக்கு அழைப்பார் அவர். நாட்டின் மிகப்பெரிய அந்த ஊடகத்துக்கு வரமாட்டேன் என எந்த அமைச்சரும் சொல்லமுடியாது. அப்பெண்மணியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுவதும் அந்த தொ.கா.நிகழ்ச்சியில் வாடிக்கை.
ஒரு முக்கியமான கேள்வி, ''டேனிஷ் கடலோரப் பகுதிகளில் எண்ணெய்க் கிணறு தோண்டும் திட்டத்தைத் தடுத்துநிறுத்த நீதிமன்றத்தில் மனுபோட்ட வழக்கறிஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அந்த வேலையை நீங்கள்தான் செய்தீர்களா?''
''இல்லை நாங்கள் செய்யவில்லை. எங்களுக்கு வேறு வேலைகள் நிறைய உள்ளன''.
''உங்கள் அந்த வேறு வேலைகளைத் தடுப்பதற்காகத்தான் அவர் மனு போட்டார் என்றும் அதற்காகவே நீங்கள் தாக்கியதாகவும் வழக்கறிஞரின் வாக்குமூலம் சொல்கிறதே என்ன சொல்கிறீர்கள்?''
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எந்த அமைச்சர்தான் பதில் சொல்ல முடியும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் தீவிரவாதி ராஸ்மஸ். அன்றே புகழ்பெற்ற அந்த ஊடகப் பெண்மணியைத்தான் அவன் கடத்திவிடுகிறான்.
தன்னை அவன்கடத்தும் நோக்கம்தான் என்ன? என்பதை ஆராயத் தொடங்குகிறார் பத்திரிகையாளர் மியா. அரசுக்கு எதிரான தீவிரவாதி ராஸ்மஸ் என்பவனின் திட்டங்களுக்கு பலவிதத்திலும் உண்மையிலேயே உதவ விரும்பும் ஊடகவியலாளர் மியா அவன் வழியிலேயே சென்று அவனை ஊடுருவி பல உண்மைகளைக் கண்டறிகிறார்.
ஆர்டிக் பனிக்கடல் பிரதேச விஞ்ஞானிதான் அந்த ராஸ்மஸ். நூற்றுக்கணக்கான செய்தித்தாள்களிலிருந்து கத்தரித்த துண்டுக் காகிதங்கள் அறை முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன. கிரீன்லேண்ட் பகுதியில் எண்ணெய்க் கிணறு தோண்டும் திட்டம் எதுவுமில்லை.
அமெரிக்காவோடு இதற்கான ஒப்பந்தம் போடப்பட மாட்டாது என தேர்தலின்போது அமைச்சர்களும் பிரதம அமைச்சரும் பேசிய பேச்சுக்களும் அதற்கு நேர்மாறாக அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்யப்படும் செய்திகள் உள்ளிட்டவற்றை கத்தரித்து ஒட்டி வைத்திருக்கிறான். சரி அதற்காக தீவிரவாதம்தான் தீர்வா? நாட்டு மக்களைத் திரட்டி களத்தில் இறங்கி போராடுவதுதானே சரியான அணுகுமுறை?
பத்திரிகையாளர் மியா, தீவிரவாதி விஞ்ஞானி ராஸ்மஸ்ஸோடு கடும் விவாதத்தில் ஈடுபடுகிறார். மியாவின் அறிவுரைகளுக்கு விஞ்ஞானி ராஸ்மஸ் செவிமடுக்கிறாரா? தனியொருவனாக அரசை எதிர்த்து இயங்கும் அவரது பழிவாங்கலை மியா எப்படி முறியடிக்கிறார் என்பதையும் மீதியுள்ள படம் விறுவிறுப்பாக காட்டிச்செல்கிறது.
பூமியில் எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு தாதுப்பொருள் இருக்கத்தான் செய்யும். அதற்காக உடனே மக்கள் நன்மைக்காக என்று அந்த இடத்தைத் தோண்டி தாதுப்பொருள் எடுக்கிறோம் எனக் கிளம்பிவிடுவது மிகமிகத் தவறானது. தாதுப்பொருள்களுக்காக இயற்கைவளமிக்க கிரீன்லேண்ட் பிரதேசத்தையே நச்சுக் கருவிகளால் துளையிட்டு நாசம் செய்வதும் அதற்கு துணைபோவதுமாக, சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் மாபெரும் கெடுதலைத்தான் அரசு செய்யத் தொடங்குகிறது.
உடனடியாக இப்படத்தைத் தேடிப் பார்ப்பவர்களுக்கு இப்படத்தின் நாயகன் ராஸ்மஸ் அமைச்சர்களை தனியொருவனாகக் குறிவைத்துத் தாக்குவதற்கு கையாண்ட நூதன முறைகள் கதைத் திருப்பத்தில் எவ்வளவு விறுவிறுப்பையும் வியப்பையும் தந்துள்ளன என்பதை உணரமுடியும்.
அச்சுபிசகாமல் தமிழ்ப்படம் ஒன்றில் இப்படத்தின் கதைசொல்லும்முறை பல்வேறு உல்டாக்கள் செய்து எடுத்தாண்டபோதுகூட படத்தில் பங்கேற்கும் சதவிகிதத்தைப் பொறுத்தவரை பெண்பாத்திரத்திற்கான முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப்பட்டது.
ஹீரோவுடன் டூயட் பாட வேண்டிய ஒரு பெண்ணாகவே அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படத்தின் முக்கிய பெண் பாத்திரம் சாகசம் நிறைந்த பங்கேற்பு எல்லாவற்றையும் குறைத்து வல்லமை அனைத்தும் ஆண்பாத்திரத்திற்கே வழங்கப் பட்டிருப்பதையும் காணமுடியும்.
என்னதான் The Shooter (skytten) எனும் டென்மார்க் திரைப்படத்தை நம்மாட்கள் சுட்டாலும் நீரளவே ஆகுமாம் நீராம்பல் என்று தனி ஒருவனாக சொல்லித் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியது தான்.அல்லது குறைபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
முந்தைய அத்தியாயம்: >டவுன்ஃபால்: உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியின் வீழ்ச்சி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT