Published : 20 Apr 2016 12:06 PM
Last Updated : 20 Apr 2016 12:06 PM
இந்த பூமியில் உயிர்வாழ நமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு எவ்வளவு மதிப்புவாய்ந்தது என்பதை 'The Deep' ஐஸ்லாந்துதிரைப்படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
வட அட்லாண்டிக் கடலில் சென்ற மிகப்பெரிய மீன்பிடி படகு விபத்துக்குள்ளாகி விடுகிறது. நடுக்கடலில் நண்பர்கள் பலரும் ஒவ்வொருவராக தத்தளித்தபடியே தண்ணீருக்குள் மூழ்க, பதற்றத்தோடு காப்பாற்ற முயன்று தோல்வியடைகிறான் குல்லி.
ஒரு மையப் பாத்திரத்தின் பார்வையிலேயே சொல்லப்பட்டாலும் கடல்பரப்பின் வளிமண்டல சூழலியல் சார்ந்த மிகப்பெரிய அனுபவத்தை நமக்குத் தருகிறது இப்படம். குல்லி எனும் மீனவனின் பாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக செய்துள்ளவர் ஐஸ்லாண்டிக் நடிகர் ஓலாஃபர் ஓலாஃஸ்சன்.
இந்தக் குறிப்பிட்ட படகில் சென்ற கடலோடிகளின் வாழ்வின் முறைகள் அவர்களது மதிப்புகள் போன்றவற்றை மிகக் கவனமாக உள்வாங்கி இக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர். அதுமட்டுமின்றி நடுக்கடலில் ஏற்பட்ட படகுவிபத்திலிருந்தும் தப்பிக்கும் குல்லி கரைக்கு நீந்திவரும் காட்சியை மிக சிறப்பாக இயக்கியிருப்பார். அப்போது அவன் தன்னந்தனியே தத்தளித்து நீந்தி வந்துகொண்டிருக்க உடன் ஒரு பறவையும் வரும். ''உங்க உணவையெல்லாம் நாங்க வந்து அடிக்கடி எடுத்துக்கறோம்.. நாங்க செஞ்சது தப்புதான். அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா'' என்று கேட்பான்.
4 வடதுருவ கடல் பிரதேசத்து ஜில்லிட்ட நீரின் குளிர்ச்சியில் கடல் மைல்களைக் கடந்து கரைக்கு வந்ததை யாரும் நம்பமாட்டார்கள். ஹெலிகாப்டர் பறந்துசென்று படகின் எச்சங்கள் கடலில் மிதக்கும் இடத்திற்கு சென்று பார்வையிடுவார்கள். மேலும், அவனைக்கொண்டு பல்வேறு நீச்சல் வீரர்களை வரவழைத்து கடல் ஆராய்ச்சி மைய வளாகத்துக்குள் உள்ள பெரிய நீச்சல் தொட்டியில் ஐஸ்கட்டிகளைப்போட்டு நீந்த வைப்பார்கள். தேசிய அளவில் வெற்றிபெற்ற நீச்சல் வீரர்கள் பாதியில் எழுது ஓட இவன் நீந்திக்கொண்டேயிருப்பான்.
ஐஸ்லாண்டு நாட்டில் வெஸ்ட்மேன் தீவான ஹெய்மேய் பகுதியில் 1984ல் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் தயாரிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த ஐலாண்டிக் மீனவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
உறவுகளைப் பொறுத்தவரை எதிர்பாராத சூழ்நிலைகளால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொண்டு அனுசரித்துச் செல்லவேண்டும் என்கிறது ஃபாதர் எனும் ஈரானியத் திரைப்படம்.
மெஹ்ருல்லாவுக்கு பைக் ஓட்டக் கற்றுக்கொடுக்க வந்த தந்தை, சாலையில் விபத்தில் இறந்துவிட மெஹ்ருல்லா தனது குடும்பத்தைக் காப்பாற்ற நகரத்திற்குச் செல்கிறான். பணத்தைச் சம்பாதித்துக்கொண்டு தன் தாய்க்கும் வீட்டுக்கு வந்து பார்த்தால் சூழ்நிலையே மாறிப் போய் இருக்கிறது.
தனது தாய் ஒரு போலீஸ்காரனுக்கு தற்போது வாழ்க்கைப் பட்டிருக்கிறாள் என்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 13, 14 வயதுக்கே உண்டான கோபமும் ஆத்திரமும் நாளுக்குநாள் பொங்குகிறது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் போலீஸ்காரரின் சர்வீஸ் ரிவால்வரைத் தூக்கித் தப்பிச் சென்றுவிட அதன்பின்னர் நிகழும் காட்சிகள் நம்மைக் கட்டிபோடுகிறது.
மணல்புயலில் சிக்கும் இருவருமே கடும் நெருக்கடிக்கும் துன்பத்திற்கும் ஆளாக நேரிட அவர்கள் விரிசல் மேலும் பெரியதாகியதா அல்லது இல்லையா என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருப்பார் இயக்குநர் மஜீத் மஜீதி.
எந்த ஆர்ப்பாடமும் இல்லாமல் யதார்த்த வாழ்வியலிலிருந்து ஒரு கதையை சொன்னவிதத்தில் ஈரானிய எல்லைகளைத் தாண்டி இப்படம் உயர்ந்து நின்றது. விருதுகள் பலதந்து உலகமும் கொண்டாடியது.
எங்கோ வெகு தொலைவில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன் நண்பனின் தந்தையைக் கண்டுவருவதற்காக செல்கிறான் ஜுலியன். காலணி எதுவும் அணியாமல் செல்லவேண்டும் என்பதுதான் நோக்கம். அந்தப் பயணத்தில் அவன் பலரை சந்திக்கிறான்.
அவன் செயல்களைக் கண்காணித்தவாறு மெதுவாக காரில் பின்தொடர்ந்து வருகிறார் ஒரு போலீஸ்காரர்.வேலையற்ற ஒரு டாக்டரும் அவருடைய மனைவி ரூத்தும், ஒரு இளம் குடும்பப் பெண்மணி ஆகிய அன்றாட தங்கள் சலிப்புமிக்க வாழ்விலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள், அவனுடன் சாலைப் பயணத்தில் உடன் இணைகிறார்கள்... அதற்குக் காரணம் அவன் அடுத்தவர்கள் மனதைப் படிப்பவன் என்பதை அவர்கள் அறிந்ததும் ஒரு காரணம்.
ஒரு மனநல மருத்துவ மனையிலிருந்து அவன் வந்திருப்பதோ, இதற்கு முன்பாக ஒரு சாலைவிபத்து நடக்க இவன் காரணம் என்பதோ இவர்களுக்குத் தெரியாது,
அதேபோல் வனாந்தரப் பகுதியொன்றில் கொட்டும் பனிக்குளிரில் போலீஸ்காரருடைய காரில் ஜுலியன் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் இரவுமுழுக்க முடங்கிக்கொண்டபோதும் அந்தக் காரை ஓட்டிவந்தவர் ஒரு போலீஸ்காரர் என்பதோ இவனை கைதுசெய்ய வந்திருக்கிறார் என்பதோ ஜுலியன் உள்ளிட்ட யாருக்குமே தெரியாது.
மறுநாளும் சாலை நடைப்பயணம் தொடர்கிறது. ஒரு இடத்தில் கார் பழுதடைந்துவிட, இப்போது போலீஸ்காரரும் இவர்களுடன் நடக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அவனை கைதுசெய்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன். ஜுலியன் எப்படிப்பட்டவன் அவன் மெய்ஞ்ஞானம் எத்தகையது என்பதை ஆராயும் இப்படம் பல அதிசயங்களை தன்னகத்தே வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT