Published : 25 May 2015 12:27 PM
Last Updated : 25 May 2015 12:27 PM
பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் இயக்கிய 'தீபன்' என்ற படம், கான்ஸ் விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து புதியதொரு வாழ்க்கையைத் துவங்க முயற்சிப்பதே 'தீபன்' திரைப்படத்தின் கதை.
இதில் முதன்மை கதாபாத்திரங்கள் மூவருமே பெரும்பாலும் தமிழிலேயே பேசுவது போல படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அரங்கில் மிக உயரியதாக கருதப்படும் கான்ஸ் பட விழாவில் தங்கப் பனை விருதை 'தீபன்' படம் வென்றுள்ளது, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறை சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு 19 திரைப்படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
'தீபன்' படத்தின் இயக்குநர் அடியார்ட், இதற்கு முன் மூன்று முறை கான்ஸ் விழாவில் போட்டியிட்டுள்ளார். 1996-ஆம் ஆண்டு 'எ செல்ஃப் மேட் ஹீரோ' (A Self made Hero) படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றார். 2009-ஆம் ஆண்டு 'பிராஃபட்' (Prophet) படத்துக்காக நடுவர்கள் தேர்வு சிறப்புப் பரிசை பெற்றார்.
தீபன் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர், இலங்கைத் தமிழர் சார்ந்த தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஷோபா சக்தி என்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT