Published : 17 Sep 2016 11:35 AM
Last Updated : 17 Sep 2016 11:35 AM
கிராமத்து மாணவர்களின் வாழ்வில் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவரும் ஒரு படமாகத் திகழ்கிறது Not One Less எனும் சீனத் திரைப்படம்.
சீனாவின் ஒரு குக்கிராமத்துப் பள்ளிக்கூட ஆசிரியர் தன் தாயார் உடல்நிலை சரியில்லை என ஊருக்குக் கிளம்புகிறார். தனக்குப் பதிலாக அக்கிராமத்தில் ஓரளவுக்குப் படிக்கத் தெரிந்த 13 வயதேயான வெய் மின்ஷியை நியமிக்கிறார். 50 யான்கள் தருவதாக பேச்சு. மின்ஷியும் சம்மதிக்கிறார்.
ஆனால் ஒரு நிபந்தனை. ஏற்கெனவே மாணவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். இதில் இருக்கும் மாணவ மாணவிகளில் ஒருவர்கூட குறையக்கூடாது. அப்படி அந்த ஆசிரியர் திரும்பி வரும்வரை மாணவர் எண்ணிக்கை சரியாக இருந்ததென்றால் 10 யான்கள் கூடுதலாக தருவதாக கூறுகிறார்.ஆனால் கிராமத்து மக்களை வறுமை வாட்டி எடுக்கிறது.
அங்கு பள்ளிக்குழந்தைகள் குறைவதே அக்குழந்தைகள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு உபயோகமாய் எங்காவது போய் வேலைசெய்து காசு சம்பாதித்து வீட்டுக்குக் கொடுக்கத்தான்.இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியை 13 வயதேயான வெய் மின்ஷி வகுப்பின் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.
அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஒரு மறக்கமுடியாத திரைச்சித்திரமாக இயற்றித் தந்துவிட்டார் இயக்குநர் Yimou Zhang. பள்ளிக்கூடத்தில் நம்மில் பலருக்கும் இப்பெண்ணின் வயதில் படிக்கும் காலத்தில பல நேரங்களில் ஆசிரியர் வராத ஒரு வகுப்பை மட்டும் (Period) பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் வந்திருக்கக்கூடும்.
ஆனால் ஒரு மாதம் முழுக்க மாணவர்களைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறதா என்ன? அப்படி வந்தால் அது என்ன அவ்வளவு எளிதானதா? வெய் மின்ஷிக்கு சவாலாகவே அமையும் வகுப்பு மாணவர்கள் சிலநாட்களிலேயே பிரச்சனையாகவும் மாறுகிறார்கள். ஒரு மாணவன் அன்று வரவில்லை.
காரணம் அவன் வேலைதேடி நகரத்திற்குச் சென்றுவிட்டான். விடுப்பில் செல்லும் ஆசிரியர் திரும்பி வரும்வரை ஒரு மாதத்திற்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியை ஒரு மாணவர்களைக்கூட குறையாமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதி அளித்ததற்கு நேர்மாறாக விழுந்த இடி இது. தன் குடும்பமும் வறுமையில் இருப்பதால்தான் இந்த வேலைக்கே வந்தவர் வெய் மின்ஷி.
இப்போது அதுவும் சிக்கலாகிவிட்டது. ஆனால் இப்பிரச்சனையை வெய் எதிர்கொண்ட மனஉறுதியும் தளராத முயற்சியும் இப்படத்தின் முதுகெலும்பு. நகரத்திற்கு அவனைத் தேடி சென்று அல்லல்படும் காட்சிகள், நம்மை பதட்டமும் கண்கலங்கவும் வைக்கின்றன. அதேநேரத்தில் சிறுவனைத் தேடுவதில் சற்றும் மனம்தளராத அவரது விடாமுயற்சி நமக்கு பதட்டத்தோடு பெரும் உற்சாகத்தையும் வரவழைத்துவிடுகிறது.
கரும்பலகையில் தாரளமாகப் பாடங்களை எழுத வண்ண வண்ண சாக்பீஸ்கள் கூட இல்லாத பள்ளிகள் ஏராளம் இவ்வுலகில். அவர்களின் தேவைகள் பற்றி உரத்துப் பேசும் இப்படம் சிறார் உள்ளங்களின் மானுட தரிசனத்தை தங்கள் உன்னதமான படங்களின் வாயிலாக இப்பூமிக்குத் தந்த ஈரானிய படங்களுக்கு நிகராக பேசப்பட்ட படம் இது.
சீன அரசின் நிர்வாகத்தை கிண்டல்செய்வதாக கேன்ஸ் இப்படத்தை போட்டியிலிருந்தே விலக்கியது. ஆனால் School Dropout குழந்தைகளின் அவலத்தைப் பேசியது ஒட்டுமொத்த உலகிற்கே பொருந்தும் என்றவகையில் வெனிஸ் திரைப்பட விழா சிறந்த படத்திற்கான தங்கச் சிங்கம் விருது அளித்து கௌரவித்தது.அதுமட்டுமின்றி இப்படத்திற்கு உலகெங்கும் நிறைய விருதுகள் கிடைத்தன.
இப்படத்தில் பங்கேற்கவேண்டிய பாத்திரங்களுக்காக தொழில்முறை நடிகர்கள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக குக்கிராமத்து மக்களை அங்குள்ள பள்ளியின் உண்மைநிலையை, அம்மாணவர்களை, ஆசிரியை Wei Minzhi மற்றும் மாணவன் Zhang Huike, பீஜிங் தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள், இயக்குநர் உள்ளிட்ட அவ்வளவு அசலான மனிதர்களையே திரையில் வாழவைத்த இயக்குநர் ஷாங் அவர்களுக்கு சிறந்த இயக்குநருக்கான கோல்டன் ரூஸ்டர் விருது கிடைத்த குறிப்பிடத்தக்கது.
Not one less / China /Dir: Zhang Yimou / 1999
முந்தைய அத்தியாயம்: >மிடுக்கு குறையாத போர்வீரர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT