Published : 14 Nov 2025 12:46 PM
Last Updated : 14 Nov 2025 12:46 PM

ஆங்கிலத்தில் திருக்குறள் ஆவணப்படம்!

காலம், நிலம் ஆகியவற்றைக் கடந்த உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி, ‘The ageless wisdom of the Indian poet and philosopher Thiruvalluvar’ என்கிற ஆவணப்படம், ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகியுள்ளது.

இதன் ஆங்கில வடிவம் நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று அமெரிக்காவின் வர்ஜீனியா நகரில் திரையிடப்படுகிறது. வள்ளுவர் பேணிய மனித சமத்துவத்தைக் கருப்பொருளாகக் கொண்ட இப்படத்தின் திரைக்கதையை எழுதி, அமெரிக்க வாழ் தமிழர்கள் - டாக்டர் விஜய் ஜானகிராமன் பொறுப்பில், படத்தைத் தயாரித்திருப்பவர் டாக்டர் ஆர்.பிரபாகரன். இவர் திருக்குறள் பற்றிய பல ஆய்வு நூல்களின் ஆசிரியர்.

திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன், இன்றைய இளம் தலைமுறை தமிழர்களும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விரிவான உள்ளடக்கத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, சென்னையின் ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் எல்லிஸ் பிரபு அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகள், உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், தேர்ந்தெடுத்த திருக்குறள்களை விளக்கும் கிராஃபிக்ஸ் விவரணைக் காட்சிகள், குறும்பட வடிவில் காமத்துப்பால் காட்சிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் இந்த ஆவணப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். தயாரிப்பில் உறுதுணையாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் படத்தை இயக்கியுள்ளார். வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம், ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x