Published : 17 Dec 2023 04:27 PM
Last Updated : 17 Dec 2023 04:27 PM
1. The Reeds (Son Hasat) | Dir: Camil Agacikonglu | Turkey, Bulgaria | 2023 | 133' | WC | Santham | 9.30 AM - துருக்கி நாட்டின் மலைப்பிரதேசமான அனடோலியாவில் ஒரு மலையடிவார கிராமம். அங்குள்ள ஏரி ஒன்றுதான் மக்கள் வாழ்வாதாரமே. அந்த ஏரியில் படகில் சென்று ஏரியில் ஆங்காங்கே செழித்திருக்கும் நாணற்புல்லை வெட்டி அறுத்து எடுத்து வந்து தனது பிழைப்பை மேற்கொள்ளும் அலி என்பவனைப் பற்றிய கதை. அந்த ஊரில் அம்மக்களை சுரண்டவும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் என்று நில நிலப்பிரபுக்களும் சில மிருகத்தனமான உள்ளூர் கும்பல்களும் அப்பகுதியில் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
அவர்களின் ஆதிக்கத்தில் அடிபணிந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லா நிலையில் அப்பகுதி மக்கள். சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டும் அலியை, அப்பகுதியை நன்கு அறிந்தவள் அலியின் மனைவி அய்செல்.
அவர்களின் வாழ்க்கை மிகுந்த வலிகளும் வேதனைகளும் மிக்கதாகவே அமைகிறது. மக்களை அடிமைப்படுத்தும் நிலப்பிரபு தனக்கு ஆதரவான உள்ளூர் அராஜக கும்பலில் இணைந்து தனக்கு பணியாற்றும்படி அழைப்பு விடுப்பதை ஏற்க மறுக்கிறான். விளைவுகள் ஒரு கொடுங்கனவின் தீயாக பரிணமிக்கிறது. இத்திரைப்படத்திற்காக இயக்குநர் செமில் அகாசிகோக்லு இப்பகுதியை பல ஆண்டுகளாக ஆய்வு செய்து இப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார்.
A Letter from Helga | Dir: Ása Helga Hjörleifsdóttir | Iceland | 2022 | 119' | WC | Serene | 2.45 PM - இப்படம் 'ரிப்ளை டூ ய லெட்டர் பிரம் ஹெல்கா' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் 'லெட்டர் பிரம் ஹெல்கா' , தலைப்பில் ரிப்ளையை எடுத்துவிட்டார்கள். வெறும் 106 பக்கங்கள கொண்ட நாவலை ஒரு அற்புதமான காவியமாக்கி உள்ளார்கள். ஐஸ்லாந்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது ஸ்ட்ராண்டிர் பகுதியில் முழுவதும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் ஒரு பக்கம் ஐரோப்பாவையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்க இன்னொரு முனையில் அதற்கு சம்பந்தமில்லாத வடதுருவத்திற்கு நெருக்கமான நிலம் ஒன்றில் நடக்கும் கதை. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் வேளையில் ஐஸ்லாந்து நாட்டின் வெகுதூர கிராமம் ஒன்றின் மக்களின் வாழ்க்கை வெகு இயல்பாக மட்டுமல்ல கொண்டாட்டத்துடன் போய்க்கொண்டிருப்பதை முதன்முதலாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள், மெல்லிசைகள், குதிரை சவாரிகள், மேய்ச்சல் வாழ்க்கை, கிராமிய குஸ்தி விளையாட்டுக்கள், வயல்வெளிகள் நிறைந்த இயற்கை வெகு அழகாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்தான் ஒரு விவசாயியின் வாழ்க்கை காட்டப்படுகிறது. தனது தோழி ஹெல்காவின் கடிதத்திற்கு ப்ஜர்னி என்ற விவசாயி, பல ஆண்டுகள் தாமதமாகப் பதிலளித்து, தனது முன்னாள் காதலியிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்க முயற்சிப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. அதேநேரம் தற்போதுள்ள பஜ்ரனியின் மனைவியுடன் அவனுக்கு நல்ல உறவு இல்லை என்பதுமாக கதை விரிகிறது. அவன் வாழ்வில் இணைந்த இன்னொரு பெண்ணின் வலி என்பதை கணக்கில் கொண்டு காதல், வருத்தம், துரோகம் போன்றவற்றை உளவியல் ரீதியான சிக்கல்களை ஒரு கவிதையாக ஆராய்கிறது என்பதால் தனித்துவம் பெருகிறது. ஒரு பெண் இயக்குநரான ஆஸா ஹெல்கா ஹெஜோர்லெஸ்போர்டிஸ் போன்றவர்களால்தான் பெண்களின் மனதை படம்பிடித்துக் காட்டமுடியும் என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.
Totam | Dir: Lila Aviles | Mexico | 2023 | 95' | France | Anna | 3.30 PM - மெக்சிகன் பெண் இயக்குநர்களின் புதிய அலையில் லைலா அவிலேஸ் மென்மையான உணர்வலைகளை உருவாக்கி தந்துள்ளார் இப்படத்தில். அவரது முந்தையப் படமான சேம்பர்மெயிட் படத்தில் மெக்ஸிகோ நகரத்தில் உள்ள மிக ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் ஒரு இளம் சேம்பர்மெய்ட் பெண், தனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள போராடும் கதைக்களன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் விருதுகளைப் பெற்றது.
லைலா அவிலேஸின் அடுத்தபடமான 'டோட்டம்' கதை 7 வயது சிறுமி சோலசிட்டாவின் தன் கண்கள் வழியே உலகை வியப்போடு காண்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அவளுக்கு எல்லாமே அதிசமயம்தான். குடும்பம் ஒரு முக்கிய நிகழ்வுக்கு பரபரப்பாக தயாராகிறது. சிறுமி சோலசிட்டாவின் தந்தை டோனாவுக்கு ஒரு தீராத நோய் உண்டு. அந்த வலியை மறக்க அவரது பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
உலகம் எப்பொது அழியும் என தனது தாயிடம் ஒரு அதிர்ச்சியான கேள்வியை எழுப்புகிறாள். அது சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தந்தையின் நோயின் அவதியைக் காண பொறுக்காமல் அதைத் தவிர்க்க அவள் தப்பிக்கும் இடம் விலங்குகள், பூச்சிகள், உலகின் பல்வேறு பருப்பொருள்கள்... சிறுமியின் உள்ளுணர்விலிருந்து ஒரு நுட்பமான கலைப்படைப்பாக ஆராயும் முயற்சி இது.
டோனாவின் நோயைக் குணப்படுத்த அதிக பொருட் செலவாகும் என்பதால் மாய சக்திகளை அவர்கள் நம்புகின்றனர் குடும்பத்தினர். மூதாதையர் ஆன்மாக்களைக் கொண்டு நோயின் தீய சக்திகளை விரட்ட முடியும் என்று ஆன்மீக நம்பிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் மீட்டெடுக்க அக்குடும்பம் பாடுபடுகிறது. ஒரு துயர முடிவை நோக்கிய அவர்களது பயணம் ஒரு மென்மையான உணர்வலைகளை அதிர்வுடன் எழுப்புகிறது.
Rabiye Kurnaz vs. George W. Bush | Dir: Andreas Dresen | Germany, France | 2023 | 119' | German Corner | Santham | 5.00 PM - சட்டத்தின் ஆட்சி குறைபாடற்ற முறையில் செயல்பட முடியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஜனநாயகம் என்பது நேர்மையானது, பாரபட்சமான தீர்ப்புகளை வழங்காது என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமுமில்லை என்கிறது இவ்வாண்டு CIFF 2023 விழாவில் 'ஜெர்மன் கார்னர்' என வகைப்படுத்தப்பட்ட திரையிடலில் பங்கேற்றுள்ள 'ரிபியாஸ் குர்னாஸ் வெர்சஸ் ஜார்ஜ் டவிள்யூ புஷ்' என்ற ஜெர்மன் திரைப்படம். ஜார்ஜ் புஷ் பெயரை வேண்டுமென்றே அரசியல் கால கட்டத்தை குறிப்பதற்காக வைக்கப்பட்டதாக இப்படத்தின் இயக்குநர் ஆந்ரேஸ் ட்ரேசன் தெரிவிக்கிறார்.
பத்தொன்பது வயதான முராத் குர்னாஸ், ஒரு துருக்கிய குடிமகனும், ஜெர்மனியில் சட்டப்பூர்வ குடியிருப்பாளரும் ஆவார். அவர் தனது இஸ்லாமிய நம்பிக்கையைப் பற்றி மேலும் அறிய பாகிஸ்தானுக்கு அக்டோபர் 2001ல் சென்றார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் ஜெர்மனிக்குத் திரும்பவிருந்த நாளில், குர்னாஸ் ஒரு போலீஸ் சோதனைச் சாவடியில் எந்தவித காரணமும்சொல்லாமல் கைது செய்யப்பட்டார். அப்போது 9/11 பரபரப்பான நேரமும் ஒரு காரணமாக அப்பாவிகளை கைதுசெய்வதற்கான ஒரு சம்பவமாக அமைந்திருந்தது. இது உண்மையில் உலகம் நன்கு அறிந்த ஒரு நடந்த கதை.
குர்னாஸ் பின்னர் அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குர்னாஸ் குவாண்டனாமோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். குவாண்டனாமோ தென்அமெரிக்காவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட ஒரு விரிகுடா பகுதியாகும். கொடும் சித்ரவதைக்கு ஆளான முராத் குர்னாஸ். அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் உளவுத்துறை அதிகாரிகள் குர்னாஸ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று முடிவு செய்த பிறகும் அவர் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவிக்கும் கொடுமையை எதிர்த்து நடத்திய போராட்டத்தை இத்திரைப்படம் பேசுகிறது.
குவாண்டனாமோவின் இருண்ட சிறைகளில் படத்தை சிக்கவைக்காமல் பெரும்பான்மையான காட்சிகள் தாயின் போராட்டமாகவே இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. முராத் குர்னாஸின் தாயான ரேபியீ குர்னாஸ் ஒரு நகைச்சுவை உணர்வுமிக்கவர். சுவாரஸ்யமான பல கதைகள் நிறைந்த ஒரு பெண்மணி ஆவார். இது படத்தை பன்முகத் தன்மையோடு அமைவதற்கு உதவியதாக இயக்குநர் தெரிவிக்கிறார்.
ரேபியீ குர்னாஸை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் ஒருவரை திரையில் காட்ட இயக்குநர் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் மிகச்சரியாக கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நகைச்சுவை உணர்வும் கொண்ட துருக்கி மொழியும் ஜெர்மனி மொழியும் நன்கு அறிந்த மெல்டம் கப்டான் என்ற சிறந்த நடிகை ஆவார். அவர் இப்படத்தில் நீதி கேட்டு உலக அரங்கில் குரல் எழுப்பும் லட்சியம் மிக்க ரேபியீ குர்னாஸ் என்ற தாயாகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT