Last Updated : 02 Jun, 2023 10:56 AM

 

Published : 02 Jun 2023 10:56 AM
Last Updated : 02 Jun 2023 10:56 AM

மழை, வெயில், காற்று, காதல்... இயற்கையை திரைமொழிகளாக்கிய மணிரத்னம் | Mani Ratnam Birthday Special 

கேட்பாறற்று அனாதையாக ரயிலின் வருகைக்காக தனிமையில் காத்திருக்கும் அந்த ரயில் நிலையம் சூறைக்காற்றின் குளிரில் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க, தனியே கத்திக்கொண்டும் புலம்பிக்கொண்டும் அதில் அடைக்கலம் புகுந்திருப்பார் ஷாருக்கான். அங்கே தூரத்தில் கருப்புத் துணி போர்த்தப்பட்டிருப்பவரிடம் ‘அண்ணே ஏன் எதுவும் பேசமாட்றீங்க’ என கேட்க, வீசும் காற்று ஒரு திருடன் போல அந்தப் போர்வையை பறித்துக்கொண்டு பறக்க அங்கே தனித்திருப்பார் மணிஷா கொய்ராலா.

கொட்டும் மழையும் வீசும் காற்றும் நிலத்தை குளிராக்கினாலும், மணிஷா கொய்ராலாவின் அந்தப் பார்வை ஷாருக்கானுக்குள் மெல்லிய கதகதப்பை கடத்தியிருக்க கூடும். இரண்டே கதாபாத்திரங்கள். சுற்றியும் மழை, காற்று. போதாக்குறைக்கு தேநீர். கூடவே ரயில்... பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான். ‘இந்த உலகத்துலயே சுருக்கமான காதல் கதை இதுதான்’ என ரயிலேறிச் செல்லும் மணிஷா கொய்ராலாவைப் பார்த்து சொல்லும் ஷாருக்கானின் வசனத்தைப்போல, மணிரத்னத்தின் படங்களின் சுருக்கமே இதுதான் என தாராளமாக கூறமுடியும்.

இதை அவரே கூட ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். “கதையை சொல்வதற்கு இயற்கை ஓர் அழுத்தமான காரணி. மழை, காற்று ஒரு காட்சியை அழகாக்கும் கூறுகள்” என்பார். அப்படியான இந்த இயற்கையை தனது லென்ஸ்களின் வழியே நுழைத்து காட்சி விருந்து படைத்தது மணிரத்னத்தின் சினிமாக்கள். அதுவும் இயற்கை உணர்வான காதலுடன் இயற்கை நிகழ்வுகள் கலக்கும்போது அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் யதார்த்தத்துக்கு நெருக்கமாக அமைந்துவிடக் கூடியவை.

‘தளபதி’ படத்தில், ‘நானா உன் பின்னாடி சுத்துனேன், நானா உன்ன பாத்து பிடிச்சிருக்குனு சொன்னேன், நானா தோள் சாஞ்சு அழுதேன்’ என ரஜினி பேசி முடித்து ஷோபானா அங்கிருந்த நகர்ந்து சென்றதும், ரஜினிக்கு வைக்கப்படும் ஷாட்டில் பின்னாலிருந்து அமைதியாய் இந்த காதல் பிரிவை வேடிக்கைப்பாரத்துக் கொண்டிருக்கும் சூரியன். சந்தோஷன் சிவனின் கேமரா வெறும் அந்த சூரியனிடமிருந்து கடன் வாங்கிய ஒளியை ரஜினி முகத்தில் பிரதிபலிக்க வைத்திருக்கும் அந்தக் காட்சி அழகியல் ஆழம். இதன் வழியே மழை..காற்று மட்டுமல்ல சூரியனும் பிரிவுக்கான வெம்மையை கடத்தும் கருப்பொருள் தான் என்பதை புரியவைத்திருப்பார் மணிரத்னம்.

அதேபோல காற்றும், மழையும் கொண்டு காதலுக்கிடையேயான பிரிவையும் இணைவை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இரண்டுக்குமான உணர்ச்சிகளை இயற்கையை கொண்டு வெளிப்படுத்தியிருந்த விதம் தனித்துவம். ‘அலைபாயுதே’ படத்தில் மெடிக்கல் கேம்ப்புக்காக கேரளா சென்றிருப்பார் ஷாலினி. காற்றும் மழையும் கலந்தடிக்கும் அந்நிலத்தின் தட்பவெட்ப நிலையில், வானில் சூளும் கருமேகங்கள் ஒருவித பிரிவின் இருன்மையை கடத்தும். அந்த இருள் சூழ்ந்த ஒளியில் ஷில்அவுட்டில் இருவரும் காதலை பகிரும் காட்சி ரம்மியம்.

அதேபோல, ‘ஓகே கண்மணி’ படத்தின் க்ளைமாக்ஸில் சுற்றி மழை பெய்து கொண்டிருக்க துல்கர் சல்மான் - நித்யாமேனனும் சின்னதாய் சண்டையிட்டுகொள்ள, அதன் பின் நீளும் அந்த உரையாடல் அன்பால் பரிணமிக்கும். சாரல் மழை (சண்டை) பெருகி அன்பு பெருமழையை கொட்டுவது போல அந்த உரையாடல் மழையுடன் ஒப்புமைப்படுத்தி எழுதப்பட்டிருக்கும். அச்சூழல் பிரிவு தொடங்கி அன்பில் முடியும். இந்த இடத்தில் ‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’ இரண்டின் பின்னணியிலிருந்து மழையையும் காற்றையும் வைத்து, பிரிவையும் இணைவையும் காட்சிப்படுத்தியிருப்பார். அந்த ஒப்புமை நுணுக்கத்துடன் அழகாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்.

காற்று, வெயில், மழையைப்போல ரயிலையும் மணிரத்னத்தையும் கூட பிரிக்க முடியாது. ‘அலைபாயுதே’ படத்தில் ‘நீ அழகா இருக்கன்னு நெனைக்கல’ வசனம் ஒலிக்கும் இடம், இரண்டு ரயில்கள் க்ராஸிங்கின் போது மாதவன் - ஷாலினி கண்கள் க்ராஸ் செய்யும் காட்சி, என தொடக்க காட்சிகள் ரயில் நிலையத்துக்குள்ளேயே நடந்துகொண்டிருக்கும். ‘மௌன ராகம்’ படத்தின் இறுதிக் காட்சியில் பிரிவை சுமந்த வேகமெடுக்கும் ரயிலை இணையத்துடிக்கும் மோகன் துரத்திச் செல்வார். இருவருக்குமிடையே காதல் அளவளாவி கொண்டிருக்கும்.

‘குரு’ படத்தில் ‘உங்க மடியில உட்கார்ந்துட்டு வர டிக்கெட் எதுக்கு?’ என ஐஸ்வர்யா ராய் கேட்கும் காட்சியில் பின்னால் மணிரத்னத்தின் ட்ரேட்மார்க் ட்ரெய்னின் சப்தத்துடன் ரஹ்மானும் இசையும் ஒலித்துக்கொண்டிருக்கும். ‘ஆயுத எழுத்து’ படத்தில் சித்தார்த் - த்ரிஷாவுக்கான பிரிவுக்காட்சி, ‘ஓகே கண்மணி’யில் துல்கர் சல்மானும் நித்யா மேனன் ரொமான்ஸ் காட்சி, ‘இருவர்’ படத்தின் மோகன்லால் - ஜஸ்வர்யா ராய்க்கான காட்சி என ரயிலோடு உறவாடிய மணிரத்னத்தின் ப்ரேம்கள் கணக்கிலடங்காதவை. உண்மையில் ‘ரயில்’ என்பது காதலர்கள் தங்களின் நெடுந்தூர வாழ்வியல் பயணத்தை தொடங்குவதற்காக காட்டப்படும் குறியீடாக கூட இருக்கலாம்.

ரயில், காற்று, மழை, வெயில், காதல்... இவற்றுடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டிருக்கும் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x