Published : 24 Jul 2014 07:31 PM
Last Updated : 24 Jul 2014 07:31 PM
ஜிகர்தண்டா படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையில், நடிகர் சித்தார்த் பொறுப்பற்றத் தன்மையுடன் கருத்துகளை வெளியிட்டதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜிகர்தண்டா படத்தை குருப் கம்பெனி சார்பாக கதிரேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் ஜூலை 25-ல் வெளியாவதாக அறிவிப்பு வந்துகொண்டிருந்தது. திடீரென தயாரிப்பாளர் கதிரேசன் ஆகஸ்ட் 1-ம் தேதி படத்தை வெளியிட அறிவித்திருந்தார். இதற்கு சித்தார்த், எங்கள் யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக தயாரிப்பாளர் முடிவெடுத்திருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் பதிலளித்தள்ளார்.
அந்த பதிலில், 'நான் எனது குரு்ப் கம்பெனி சார்பாக தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம். நையாண்டி ஆகிய படங்களை தயாரித்துள்ளேன். சுமார் 50 படங்களை விநியோகம் செய்திருக்கிறேன், 200 படங்களின் ஆடியோ கேசட் வெளியிட்டுள்ளேன். இதுமட்டுமல்லாமல் 100 படங்களுக்கும் மேல் வெளிநாடுகளுக்கும் படங்களை விநியோகம் செய்துள்ளேன்.
கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நேர்மையான முறையில் படங்களை வெளியிட்டு எங்களுக்கென்று இந்தத் துறையில் நல்ல பெயரை பெற்றுள்ளோம்.
சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா திரைப்படத்தை அதிக முதலீட்டில் தயாரித்துள்ளேன். இந்தப் படம் வெளியிடப்போகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விஜய், அஜித் நடித்த படங்கள், கோச்சடையான் திரைப்படம் மற்றும் பல்வேறு திரைப்படங்கள் வாரந்தோறும் வந்துகொண்டிருந்தமையால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து வந்தேன்.
எந்த ஒரு தயாரிப்பாளரும் தான் எடுத்த படத்தை பைனான்ஸ் பிரச்சினை கருதி உடனே வெளியிடத்தான் விரும்புவாரே தவிர, தள்ளிப்போட நினைக்கமாட்டோம்.
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் ஒரு வாரம் தள்ளி வாருங்கள். படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் விரும்பினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தேன். ஜிகிர்தண்டா திரைப்படம் எனது முதலீடு. அது எனது குழந்தை. எனது குழந்தையை நானே கொல்ல விரும்புவேனா? இது எப்படி சித்தார்த்துக்கு புரியாமல் போனது.
ஜிகர்தண்டா எல்லோரும் ரகிக்கக் கூடிய தரமான படம். இதை எந்த நேரத்தில் வெளியிட்டால் அது சரியானபடி மக்களிடம் போய் சேரும் என்பது முதலீடு போட்ட எனக்கு மட்டும்தான் தெரியும்' என்று தயாரிப்பாளர் கதிரேசன் கூறியிருந்தார்.
ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் படாதபாடு படுகிறார்கள், ஒரு படத் தேதியை வெளியிடுவதற்குள் ஆயிரம் பிரச்சினைகள் வருகின்றன. குறிப்பாக வாரம் முன்று, நான்கு திரைப்படங்கள் வெளிவரும்போது வியாபார ரீதியாக பல பிரச்சினைகள் தயாரிப்பாளருக்கு வரும்.
சினிமாவிற்குள் இருக்கும் வியாபார பிரச்சினைகள் பொதுவாக நடிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு படம் வெளியாகும்போது. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் இவர்களின் கருத்தை தெரிந்துதான் பட வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும். இது தெரியாமல் மேலோட்டமாக படம் தள்ளிப்போனதற்கு நடிகர் சித்தார்த், தயாரிப்பாளரை குற்றம் சாட்டியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
படத்தில் நடித்ததற்குரிய சம்பளத்தை வாங்கிய நடிகர் சித்தார்த், தயாரிப்பாளரின் பட வெளியீட்டுத் தேதியில் தலையிட எந்தவிதமான உரிமையும் இல்லை. நடிகர் சித்தார்த்தின் இந்த செயல்பாட்டிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தயாரிப்பாளர் சத்திய ஜோதி டி,ஜி,தியாகராஜன். டி,சிவா. ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.தாணு, கே,ராஜன், ஜாகுவார்தங்கம், எஸ்.எஸ்.துரைராஜ், சித்ராலட்சுமணன், ஹெச்.முரளி. சௌந்தரபாண்டியன் மற்றும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களும் கண்டனம் தெரிவித்தள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT