Published : 21 Dec 2022 09:11 PM
Last Updated : 21 Dec 2022 09:11 PM
கடந்த 1986-ம் ஆண்டு இயக்குநர் ஆர்.பூபதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'டிசம்பர் பூக்கள்'. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில், 'அழகாக சிரித்தது அந்த நிலவு' பாடல் பலரது ஆல்டைம் பேஃவரைட். இசைஞானி இளையராஜாவின் இசையில், ஜெயச்சந்திரன் ஜானகி இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். வித்தியாசமான கதையோட்டம் கொண்ட இந்த திரைப்படத்தில் வரும் இப்பாடலில் இசைஞானி இளையராஜா கிடார் இசைக்கருவியை பாவித்திருக்கும் விதம் பாடல் கேட்பவர்களின் மனங்களை பனிபோல் உருகச் செய்திடும்.
ராகதேவனின் இசையில் வரும் பாடல்களின் முகப்பு இசையோடுதான் எப்போதும் தொடங்கும். ஆனால், இந்தப் பாடலின்,
"அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது
இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில்
லலலலலா
நிழல் மேகங்கள்
லலலலலா
மலையோரத்தில்
லலலலலா
சிறு தூறல்கள்
லலலலலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லலலல லலலல" பல்லவிக்கான வரிகளை ஜெயச்சந்திரனும், ஜானகியும் முதலில் பாடுவர். பின்னர்தான் பாடலின் முகப்பிசை வரும்.
இந்த வரிகளை ஜெயச்சந்திரனும், ஜானகி அம்மாவும் பாடும்போது விழும் கிடார் கார்டுகளிலேயே நாம் மயங்கிவிடுவோம். அதுவும் ஜானகி அம்மா பாடும் அந்த லலலலலா வாய்ப்பே இல்லை. பின்னர் வரும் பாடலின் தொடக்க இசையை கிடாரில் ஆரம்பித்து புல்லாங்குழல் சேர்த்து டிரம்ஸின் ரிதத்தோடு நிறைவு செய்திருக்கும் இடங்களில், பாடலை கேட்பவர்களின் மனங்களில் எல்லாம் மேஸ்ட்ரோவின் இசை வர்ணஜாலங்கள் பட்டாம்பூச்சி போல சிறகடிக்கும்.
"நதியே நீராடத்தான்
உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான்
நாள் பார்த்தேன்
நாளை நாம் ஆகத்தான்
காத்துக்கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும்
கை சேர்த்தேன்
மானே உன் அழகினில்
நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தைத்தானே
எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள்
இதுதான் வரவோ..
நாணமென்ன அச்சமென்ன" என்ற முதல் சரணத்தின் வரிகள் தோறும் காவியக் கவிஞரின் காதல் ரசம் சொட்டும். அதேநேரத்தில் இந்த வரிகளைப் பாடும் ஜெயச்சந்திரன், ஜானகி குரல்களும் பாடல் கேட்பவர்களுக்கு அந்த உணர்வுகளை லாவகமாக கடத்தியிருக்கும்.
இதேபோல், பாடலின் இரண்டாவது சரணத்தில்,
"உன்னை நானல்லவோ
கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே
செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும்
தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா
இள மாலைப் பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை
இதுவோ.. இரு விழி சிவந்திட" என்ற வரிகள் மூலம் கவிஞர் வாலி காதல்கொள்வோரின் ஊடலின் அழகியலை கவிதையாக படைத்திருப்பார். பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனும் ஜானகியும் அப்படி கொஞ்சி குலைந்து பாடியிருப்பார்கள்.
இவற்றைவிட, பாடலுக்கான இசைக்கோர்ப்பைக் கேட்டு மயங்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. பாடலின் முதல் சரணத்துக்கு முன் பின்னிசையில், புயலென கிளம்பும் வயலின்களோடு வரும் பேஸ் கிடாரின் அரேஞ்மென்ட்ஸ், பாடல் கேட்பவர்களுக்கு ஹெலிகாப்டரில் பறக்கும் உணர்வைத் தரும். அப்படியொரு மாயங்களால் மயக்கியிருப்பார் இசைஞானி. அதேபோல், வயலின்கள் சற்று ஓய்வெடுக்கும் நேரத்தில் கிடாரில் தாலாட்டி, பின் வயலின் மற்றும் புல்லாங்குழல் சேர்ந்துவரும் இடங்களை ரசித்தால் மெய்மறந்துபோகும்.
இசைஞானியின் இசைக்குழுவில், Acoustic மற்றும் Electric கிடார்களை சதா என்பவரும், Bass guitar-ஐ மறைந்த சசிதரன் முனியான்டி என்பவரும் இசைத்துள்ளனர். இந்த இருவர் சேர்ந்து ராஜாவின் இசையில் கிடாரில் செய்திருக்கும் சாதனைகள் நெருங்கவே முடியாதவை. சசிதரன் முனியான்டி இளையராஜாவின் மைத்துனர். இந்தப் பாடலில் மட்டுமல்ல, ராஜாவின் பாடல்களில் வரும் Bass guitar பகுதிகள் அனைத்தையும் வாசித்தவர் இவர்தான்.
இந்தப் பாடலின் காட்சியமைப்பும் அழகான ஒரு மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டிருக்கும். 80-களின் ஆதர்ச நாயகன் மோகன் கிளின் ஷேவிலும், ரேவதி மாடர்ன் டிரஸ்ஸிலும் கலக்கியிருப்பார்கள். அடர்ந்த வனம், கடுங்குளிர், உயர்ந்த மரங்கள், ஒழுங்கற்றப் பாதைகள், சரிவான மலைமுகடுகள், தெளிந்த குளிர்ந்த நீரோடை, புல்வெளியெங்கும் நிரம்பிக் காணப்படும் பனித்துளிகள், பச்சையாடைப் போர்த்திய மலைகள் என அனைத்தையும் கடந்து பாடல் கேட்பவர்களின் மனதில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை. ராகதேவனின் தேவகானம் தொடரும்....
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT