Published : 30 Jun 2014 06:28 PM
Last Updated : 30 Jun 2014 06:28 PM
11ம் வகுப்பு படிக்கும் பொது ஒரு மாணவன் எழுதிய கவிதை. இப்பொது அவர் வயது 32. அந்த மாணவனின் பெயர் மஷூக் ரஹ்மான்.
இசையுலகில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியவர்கள் எப்போதுமே, தனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தெரியும் என்று வெளிப்படுத்தி கொள்வதில்லை. ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றி விட்டு, தற்போது ICTஐசிடி அகாடெமி ஆப் தமிழ்நாடு என்னும் நிறுவனத்தின் கல்வி சார்ந்த காலாண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றுகிறார் மஷூக் ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பழக்கம், அவரது ஆசைகள் என்று அவரிடம் உரையாடியதில் இருந்து சில துளிகள்..
ஏ.ஆர்.ரஹ்மானுடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது...
’அலைபாயுதே ’படம் பார்க்கும் போது என் பெயரும் திரையில் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வருடத்தில் 1000 கவிதைகளை எழுதினேன். நிறைய பாடல்களை எழுதிய பின் அதிலிருந்து இரண்டு மூன்று கவிதைகளை தேர்வு செய்து இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முகவரி அறிந்து கொரியர் செய்து வந்தேன்.
2004ல் இசைப் புயல் அவர்களை யாருடைய பரிந்துரையுமின்றி இறையருளால் சந்தித்தேன். வாய்ப்பு கேட்டு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனடியாக பதில் அனுப்பியதுமல்லாமல் குறைந்த கால அவகாசத்தில் அவரை நேரில் சந்திக்கவும் அனுமதித்தார். நேரில் சந்தித்தபோது என் கவிதைகளைப் படித்துவிட்டு, நன்றாக உள்ளது, காத்திரு உனக்கான வாய்ப்பு வரும்போது அழைக்கிறேன் என்று கூறினார்.
உங்களது ஆரம்ப கால முயற்சிகளுக்கு நிறைய தடங்கல்கள் இருந்திருக்குமே?
தமிழில் தட்டச்சு கற்று கொண்டு கவிதைகளை டைப் செய்து வைத்தேன். பல முயற்சிகளின் விளைவாக தமிழ்நாடு இசை நாடகத்துறை அமைச்சகத்தின் அப்போதைய மேலாளர் ஜெயக்குமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. செய்தித்தாள்களில் ‘இன்றைய நிகழ்ச்சிகள்’ பகுதியைப் பார்த்து இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சொன்னார். அதன்படி பார்த்து, ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் 40 வருடங்களுக்கும் மேலாக நடத்திவந்த ’கவிதை உறவு‘ என்ற பழமை வாய்ந்த இலக்கிய மன்றத்தின் மாதாந்திர போட்டியில் கலந்துகொண்டு பூவை செங்குட்டுவன் அவர்கள் கையால் இரண்டாவது பரிசு பெற்றேன். அம்மன்றத்தில் மேலும் பல முன்னணி எழுத்தாளர்களிடமும் பரிசு பெற்றுள்ளேன்.
புத்தகம் வெளியிட வேண்டும் என்று சொன்னால், சினிமாவில் நுழைந்திருந்தால் தான் புத்தகம் வெளியிடுவோம் என்றனர் சிலர். புத்தகம் வெளியிட்டால் சினிமாவில் நுழையலாம் என்று மேலும் சிலர் கூறினர். மிகவும் போராடித் தான் திரைத்துறையில் நுழைய முடிந்தது
ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து நீங்கள் பணியாற்ற பாடல்களைப் பற்றி....
2007ல் ‘ஒன் லவ்’ என்ற இசைப் புயலின் ஆல்பத்திலும், ’ஜோதா அக்பர்’ படத்தில் ‘க்வாஜா எந்தன் க்வாஜா’ பாடலையும் எழுதினேன். என் நெடுநாளைய கனவு நிறைவேறியது. அதாவது என் முதல் பாடலை இசைப் புயல் ஏ. அர். ரஹ்மனுக்கே எழுத வேண்டும் .அதை அவரே பாடவும் வேண்டும் என்பதுதான் அக்கனவு. இறைவனுக்கு நன்றி.
நீங்கள் நிறைய பாடல்கள் எழுதுவது இல்லையே.. என்ன காரணம்?
இசைப்புயல் ஏ. அர். ரஹ்மான் அவர்களிடம் நான் வைத்த கோரிக்கையே, கருத்துள்ள பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள் மற்றும் நம் நாட்டின் பெருமையைக் கூறும் பாடல்கள் மட்டும் எழுத விருப்பம் என்பதுதான். காலம் என்னைத் தேடிவரும் என்று நம்புகிறேன். புகழனைத்தும் இறைவனுக்கே!
இப்போதுள்ள பாடலாசிரியர்கள் பற்றி உங்களது கருத்து என்ன?
வளமான வார்த்தைகள் ஆழமான சிந்தனைகள் புதிய கவிஞர்களிடம் உள்ளது. நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கலாம். நல்ல கருத்துகளை சொல்லலாம். பேச்சாளர்கள் பெருகிவிட்டார்கள் ஆனால் தரமான பேச்சு குறைந்திருக்கிறது . கருத்து சரியா தவறா என்று பார்ப்பது இல்லை. பார்வை சிதைப்பதை வெறுக்கிறேன். திரை இசையில் குடியை மையமாக வைத்து பாடல்கள் வருகின்றன. என்னால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. நமக்கென்று ஒரு நிலையான இடம் பிடிக்க வேண்டும். அப்போது தான் நல்ல கருத்துக்கள் எளிதில் சென்றடையும்.
உங்களது அடுத்த திட்டம் என்ன.. தொடர்ந்து திரையுலகமா.. கவிதை தொகுப்பா?
நான் எழுதியுள்ள அடுத்த புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் கைகளால் வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்காக வழிநடத்த யாராவது முன்வந்தால் நான் மிகவும் உதவியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஏ. அர். ரஹ்மானை சந்தித்ததை போல இவரையும் சந்திப்பேன்
’நெய்தலில் ஒரு முல்லை’ என்ற கவிதை நாட்டுப்பாடல். முற்றிலும் நெய்தல் மற்றும் முல்லை இரண்டு நிலங்களின் மரபுகளைக் கொண்டது இந்த கவிதை நாட்டுப்பாடலை எதிர் கால திட்டமாக ஒரு அனிமேஷன் படம் அல்லது அனிமேஷன் குறும்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளேன் அதை செய்ய முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT