கார் விபத்தில் சிக்கும் சிபிஐ அதிகாரியான நயன்தாரா, பார்வையை இழக்கிறார். அதனால், பணியைத் துறக்க வேண்டிய சூழல் உருவாகிறது. பார்வை திரும்புவதற்கான மருத்துவ சிகிச்சையில் தாமதம் ஏற்பட, பார்வையற்ற வாழ்வுக்கு தன்னை பழக்கிக் கொள்கிறார். ஒரு மழைஇரவில், பேருந்து நிறுத்தத்தில் கால்டாக்ஸிக்காக அவர் தனியே காத்திருக்கிறார். இளம்பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் சைக்கோவான அஜ்மல் அவரை கவனிக்கிறான். கால்டாக்ஸி ஓட்டுநர் என்றுஅறிமுகம் செய்துகொண்டு, அவரை காரில் ஏற்றிக்கொள்கிறான். ஒரு கட்டத்தில், தவறானநபரிடம் சிக்கியதை நயன்தாரா உணர்கிறார். அந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்கு உள்ளாகிறது. அதிர்ஷ்டவசமாக அஜ்மலிடம் இருந்து நயன்தாரா தப்பிக்கிறார். கார் விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தும் விஷயம் அஜ்மலுக்கு தெரிகிறது. அதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் நயன்தாராவை மீண்டும் கடத்தமுயற்சிக்கிறான். அவர் சிக்கினாரா, அஜ்மலை போலீஸார் நெருங்கினார்களா என்பது மீதிக் கதை.
பாசமான தம்பியின் இழப்பில் இருந்து மீளமுடியாத சோகம் ஒரு பக்கம் இருக்க, பெரும் துணையாக இருந்த ‘கண்ணா’ என்ற தனது செல்ல நாயும் இறந்தது தெரியவந்ததும் உடைந்து உருகி, நடிப்பில் முத்திரைபதிக்கிறார் நயன்தாரா.
காவல் உதவி ஆய்வாளராக நடிக்கும் மணிகண்டன் கதாபாத்திரமும் படத்தின் ஓட்டத்துக்கு உதவியாக இருக்கிறது. படம் முழுக்க நயன்தாராவுடன் பயணிக்கிறார். உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. அளவற்ற பதற்றம், பயத்தை சற்று குறைத்திருக்கலாம்.
சைக்கோ கடத்தல்காரனாக அஜ்மல் மிரட்டியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகுஆக்ரோஷமான வில்லன். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். பெண்களை துன்புறுத்தும் இடங்கள், காவல் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் இடங்கள் செயற்கைத்தனம். அவரது பாதிப்புக்கான ஃப்ளாஷ்பேக் காரணம் கதையில் பெரிதாக ஒட்டவில்லை.
டெலிவரி பையனாக வரும் கவுதம் கதாபாத்திரம் படத்துக்கு நல்ல திருப்புமுனை. மெட்ரோ ரயிலில் அஜ்மலிடம் சிக்கிக்கொள்ளும்போது, டெலிவரிபாயின் யோசனையை கேட்டு நயன்தாரா எடுக்கும் முயற்சிகள் கைதட்ட வைக்கின்றன. இருவருக்குமான சண்டை, சென்டிமென்ட் காட்சியும் ரசனை.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு, படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. படம் பெரும்பாலும் இரவு நேர காட்சிகளாகவே நீள்கிறது. த்ரில்லர் படத்துக்கான உழைப்பைபின்னணி இசையில் அளித்துள்ளார் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
முதல் அரை மணி நேரத்திலேயே முழுகதைக் களத்தையும் கணித்துவிட முடிகிறது. பெரிய அளவிலான குற்றங்கள், இளம்பெண்கள் கடத்தல், கார் விபத்து என ஈடுபடும் குற்றவாளி அஜ்மலை, போலீஸார் தேடும் நடவடிக்கைகளில் எந்த விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லாதது தொய்வை உண்டாக்குகிறது. குற்றவாளியை பிடிப்பதற்கு, நவீன தொழில்நுட்ப வசதிகளும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு சிபிஐ அதிகாரிக்கான புத்திசாலித்தனத்தையோ, சமயோசிதத்தையோ கண் பார்வையற்ற நயன்தாராவிடம் காண முடியவில்லை. முக்கிய காட்சிகளில் எல்லாம் செல்போனை தவறவிட்டு, அதை தேடுவதிலேயே கவனமாக இருக்கிறார். அதனால், ஒரு த்ரில்லர் படத்துக்கான ஓட்டம் தடைபடுகிறது.
பெரும் வரவேற்பை பெற்ற ‘பிளைண்ட்’ கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ்ரீமேக்காக வெளிவந்திருக்கிறது ‘நெற்றிக்கண்’. திரைக்கதையில் தமிழுக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறார் இயக்குநர் மிலிந்த் ராய். சஸ்பென்ஸ் குறையாமல் அந்த மாறுதலை செய்து, திரைக்கதையின் வேகத்தை கூட்டியிருந்தால் முக முக்கியத்ரில்லர் படமாக ‘நெற்றிக்கண்’ இருந்திருக்கும்.
WRITE A COMMENT