ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த ‘கசட தபற’


ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த ‘கசட தபற’

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கசட தபற' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் 'கசட தபற'. ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் ஆகியோரிடம் பணிபுரிந்தார் சிம்புதேவன். ஒரே கதையில் பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன.

2019-ம் ஆண்டிலேயே இந்தப் படம் தயாராகிவிட்டது. ஆனால், தொடர் கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது 'கசட தபற' படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. சோனி லைவ் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

வெங்கட் பிரபு தயாரிப்பில் 'கசட தபற', 'விக்டிம்' ஆந்தாலஜி ஆகிய இரு படங்கள் இருந்தன. இரண்டுமே சோனி லைவ் ஓடிடி நிறுவனத்தில் நேரடியாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x