Published : 07 Oct 2015 02:52 PM
Last Updated : 07 Oct 2015 02:52 PM
கொஞ்சம் திட்டமிட்டால், குறைந்த நாட்களில் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட முடியும் என்று 'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'தூங்காவனம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து, த்ரிஷா, மதுஷாலினி உள்ளிட்ட படக்குழுவினரோடு தனுஷ், ஸ்ருதிஹாசன், கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "'தூங்காவனம்' திரைப்படம் 40 நாட்களில் எடுத்தார்கள், 30 நாட்களில் எடுத்தார்கள் என வெவ்வேறு நம்பர்கள் சொல்லப்படுகின்றன. இரண்டு மொழிகளில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பல காட்சிகள் இருமுறை செய்யப்படுவதாகவே அமைந்தன. கார் உருளும் காட்சிகள் மற்றும் போலீஸ்காரர்கள் வரும் காட்சி என அனைத்துமே இரண்டு முறை காட்சிப்படுத்தினோம். இப்படி எல்லாமே இரண்டு முறை பண்ணியதால், இது இரண்டு படங்கள் என திண்ணமாக சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களையும் நாங்கள் முதலில் 52 நாட்களில் முடிக்க தீர்மானித்தோம். எடுத்த படத்தைப் போட்டு பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்ய வேண்டியது இருந்ததால், மேலும் 8 நாட்கள் அதிகமாகின. மொத்தம் 60 நாட்களில் 2 படங்கள். பிரித்துக் கொண்டால் 30 நாட்களில் 1 படம் என்று சொல்லலாம்.
இதை ஏன் பெருமையாக சொல்கிறேன் என்றால் நானே 200 நாட்களுக்கு படம் பண்ணியிருக்கிறேன். கொஞ்சம் திட்டமிட்டால், அவ்வளவு நாட்கள் தேவையில்லை என்பது என் கருத்து. இதைச் சொல்லும் போது, பல்வேறு நபர்கள் இந்தக் காலத்தில் முடியாது என்று சொன்னார்கள். செய்யும் முடியும் என்று தீர்மானித்து, கடந்த 5, 6 வருடங்களாக ஒரு நல்ல அணியை அமைத்திருக்கிறோம்.
அந்த அணியின் வெற்றி தான் இந்தப் படம். நான் சொல்லிவிட்டேன் என்பதால் பண்ணிய படம் அல்ல. இதற்கு முன்பு 'ராஜபார்வை' என்ற படம் 55 நாட்களில் 2 படங்கள் பண்ணினோம். அத்தனை நபர்களும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக சாத்தியம் தான்.
ஒரு சி.டி மாதிரியான வட்டை கையில் கொடுத்து இதுதான் பாட்டு என்று நிரூபிக்க வேண்டிய காலம் இல்லாமல், இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐ-டியூன்ஸில் பாடல் வெளியாகிவிட்டது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது" என்று கமல்ஹாசன் பேசினார்.
இவ்விழாவின், இறுதியாக சி.டியை வெளியிட கேட்டார்கள், இல்லை அது வேண்டாம் என்று கமல் மறுத்துவிட்டார்.
'தூங்காவனம்' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமல்ஹாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT