Published : 18 Oct 2015 02:35 PM
Last Updated : 18 Oct 2015 02:35 PM

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க நாம் சில சமயங்களில் விடுவதில்லை: நடிகர் சூர்யா ஆதங்கம்

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க நாம் சில சமயங்களில் விடுவதில்லை என்று ‘பசங்க 2’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பலர் நடித்த ‘பசங்க 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. ‘பசங்க’ படக்குழுவினர் வெளியிட்ட இப்படத்தின் இசையை ‘பசங்க 2’ குழுவினர் பெற்றுக் கொண்டனர். சூர்யா, ஜோதிகா, கார்த்தி, சிவகுமார், இயக்குநர் ராம், சமுத்திரக்கனி, பிரபுசாலமன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது:

பாண்டிராஜ் சார் இக்கதையோடு என்னிடம் வந்தது எனக்கு கிடைத்த வரம். ‘பசங்க 2’ குழுவினருக்கும், இக்கதையில் அழகாக நடித்துக் கொடுத்திருக்கும் குழந்தைகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

‘பசங்க’ படத்தில் கிராமப்புறத்தில் இருக்கும் குழந்தைகளைப் பற்றிய விஷயங்களை பாண்டிராஜ் பதிவு செய்திருந்தார். இப்படத்தில் நகர்ப்புறத்தில் உள்ள குழந்தைகளைப் பற்றிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். குழந்தை களை குழந்தைகளாக இருக்க நாம் சில சமயங் களில் விடுவதில்லை. அவர்களை குழந்தை களாக இருக்க விடவேண்டும் என்பதை இப்படம் மூலமாக வலியுறுத்தி இருக்கிறோம்.

ஒவ்வொரு குழந்தையுமே ஸ்பெஷல்தான், அவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. படிப்பை மட்டும் நம்பாமல், அவர்களின் மற்ற திறமைகளையும் நம்பலாமே என்று சொல்கிற படமாக ‘பசங்க 2’ இருக்கும். நவம்பர் மாத இறுதியில் இப்படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறோம்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “ நான் ‘பசங்க’ படத்துக்குப் பிறகு நிறைய பணம் பண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் ‘பசங்க 2’ மூலம் படம் பண்ணியிருக்கிறேன். அதெல்லாம் ஆவின் பால் என்றால் இது தாய்பால்” என்றார்.

‘பசங்க 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார், நடிகை ஜோதிகா, இயக்குநர்கள் ராம், சமுத்திரக்கனி, பிரபுசாலமன், பாண்டிராஜ்உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். படம்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x