Published : 14 Oct 2015 05:23 PM
Last Updated : 14 Oct 2015 05:23 PM

சுமுகத் தீர்வை விஷால் அணி விரும்பவில்லை: சரத்குமார்

நடிகர் சங்க கட்டிடப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க எதிரணியினர் விரும்பவில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:

''நடிகர் சங்கத்துக்கு 4.74 கோடி ரூபாய் கடன் இருந்தது. நட்சத்திர கலைவிழா நடத்தி அந்த கடனை அடைத்தோம்.

நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை. நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது. கட்டிடம் கட்டுவதற்காக நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. அதுவும் சங்கத்தின் வருமானத்துக்காகவே நிலம் குத்தகைக்கு விடப்பட்டது.

எஸ்.வி. சேகர் பிளாட் கட்டலாம் என்று கூறினார். எஸ்பிஐ சினிமாஸ் என்ற தகுதி படைத்த நிறுவனத்துடன் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போட்டோம்.

அதுகுறித்து சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பேசினோம். அப்போது யாரும் எந்த எதிர்ப்பும் கூறவில்லை. பூச்சிமுருகன் உட்பட அனைவரும் வரவேற்றனர்.

அதற்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்றே கட்டிடம் இடிக்கப்பட்டது. கட்டிடத்தை இடிக்க 10, 42, 130 ரூபாயை மாநகராட்சிக்கு கட்டினோம்.

புதிய கட்டிடம் கட்ட அதிகபட்சம் 15 கோடி ரூபாய் செலவாகும். 15 ஆண்டுக்கு குத்தகை ஒப்பந்தம் செய்யவே விரும்பினோம்.

செலவான தொகையை மீட்க முடியாது எஸ்பிஐ சினிமாஸ் விளக்கம் அளித்ததால், ஆடிட்டர்களின் ஆலோசனை பெற்ற பிறகே கூடுதல் குத்தகை காலத்துக்கு ஒப்புதல் அளித்தோம். 29 ஆண்டுகள், 11 மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

கட்டிடத்தை இடித்ததும் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்தார். கடனை அடைக்க தலைவர், பொதுச்செயலாளர் கையெழுத்து போதுமானதாக இருந்தது. ஒப்பந்தத்திற்கு தலைவர், பொதுச்செயலாளர் கையெழுத்திட்டால் தவறா?

செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் எதிரணியினர் பங்கேற்றதில்லை. எந்த கருத்தும் கூறியதில்லை. கடிதங்கள் மூலம் கூட கருத்து கூறவில்லை. தவறு இருந்தால் சுட்டிக்காட்டி இருக்கலாம். இந்த ஒப்பந்தத்தை யாரும் நேரில் விமர்சிக்கவில்லை. ஆலோசனை கூட தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் சங்க உறுப்பினர்கள் எளிதில் அணுகும் நிலையில்தான் நான் இருக்கிறேன்.

ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்புபவர்கள் சங்க கூட்டங்களில் பேசாமல், பொது வெளியில் கேள்வி எழுப்புகின்றனர். பிரச்சினையை சுமுகமாக தீர்க்க எதிரணியினர் விரும்பவில்லை.

மனசாட்சிப்படி எந்த தவறும் செய்யவில்லை. அனைத்தும் முறைப்படிதான் நடந்தது. எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது. இதற்கான ஆவண நகலை அனைவருக்கும் தர தயாராக உள்ளோம்.

பூச்சி முருகன் வழக்கைத் திரும்பப் பெற விரும்பாதது ஏன்? வழக்கு நிலுவையில் உள்ளதால் கட்டிடம் கட்டும் பணி தொடங்கவில்லை.

சங்க கட்டிடம் இருந்த தெரு வழியாக கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் வந்ததே இல்லை'' என்று சரத்குமார் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x