Published : 29 Oct 2015 02:56 PM
Last Updated : 29 Oct 2015 02:56 PM
'இஞ்சி இடுப்பழகி' படத்தின் கதாபாத்திரத்துக்கு அனுஷ்கா உடல் எடையைக் கூட்டியது தொடர்பான தகவல்களை இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் நாசர்.
பிரகாஷ் கோவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. மரகதமணி இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட 'இஞ்சி இடுப்பழகி' படக்குழு மற்றும் விழாவுக்கு வந்திருந்த பிரமுகர்கள் இணைந்து பெற்றுக் கொண்டார்கள்.
இவ்விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியது:
"இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் மரகதமணி தான். இளையராஜாவுக்கு இணையான ஓர் இசையை அவர் வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதற்கு 'பாகுபலி' உள்ளிட்ட பல படங்கள் சாட்சியாக இருக்கின்றன.
இப்படத்தின் இயக்குநர் பிரகாஷ் ராவ் எனக்கு ஒரு நடிகராக தான் அறிமுகம். அவரே இயக்கி நடித்த ஒரு ஆங்கில படத்தில் நான் நடித்திருக்கிறேன். அவர் தனக்கான ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அழிக்க முடியாத ஓர் அடையாளம் இருக்கிறது. அவருடைய அப்பா ராகவேந்திர ராவ் அவ்வளவு பெரிய இயக்குநர். அந்த அடையாளத்தை விட, தனக்கு ஒரு சுய அடையாளம் வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்.
ஆர்யாவைப் பற்றி பெண்கள் மட்டுமே பேச வேண்டும் என்று கிடையாது. அவருடன் நானும் 3 படங்கள் பணியாற்றிவிட்டேன். ஆகையால் நிறையப் பேசலாம். படப்பிடிப்பு தளத்தை எப்போதுமே கலகலப்பாக வைத்திருப்பார். அனைவருமே நாயகிகளோடு மட்டும் தான் பேசிக் கொண்டிருப்பார் என நினைக்கிறார்கள். தன்னைச் சுற்றி தான் கதை நகர வேண்டும், சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன்றைய நாயகர்கள் மத்தியில் ஒரு நல்ல கதைக்காக தேதிகள் ஒதுக்கி நடித்திருப்பதற்காக ஆர்யாவைப் பாராட்டுகிறேன்.
இவ்விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நான் கலந்து கொள்ளவில்லை. ஒரு நடிகராக அல்ல. என்னுடைய மகள் அனுஷ்கா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதற்காக மட்டும் தான். அவர் என்னிடம் இக்கதையைக் கூறி, இந்த மாதிரி ஒரு பாத்திரம் பண்ணப் போகிறேன் என்றார். உடனே மிகவும் சந்தோஷமாக, படத்தின் பொருட்செலவு பொருத்து ஹாலிவுட் அல்லது மும்பையில் உள்ள நல்ல ஒப்பனைக் கலைஞரைக் கமல் உதவியோடு சொல்கிறேன் என கூறினேன்.
அது எல்லாம் வேண்டாம் சார், நான் உடல் எடை போடப் போகிறேன் என்றார். எடையைக் கூட்டுவதற்கு ஒரு காலகட்டம், குறைப்பதற்கு ஒரு காலகட்டம் இடையே நிறைய படங்கள் போகுமே என்றேன். அனைவருமே என்னை அழகாக இருக்கிறாய் என்று சொல்லிக் கொண்டே இருப்பதால், எடையைக் கூட்டி அந்த பாத்திரத்தை உணரப் போகிறேன் என்று என்னிடம் ஆர்வத்துடன் தெரிவித்தார் அனுஷ்கா.
உடல் எடையைக் கூட்டி நடித்தாலும் அழகாகத் தான் இருக்கிறார் அனுஷ்கா. அவர் ஒரு நல்ல நடிகை என்பது இரண்டாவது தான், முதலாவது பழகுவதற்கு இனிமையானவர்.
கண்டிப்பாக இப்படம் வழக்கமான படமாக அல்லாமல், புதுமையான, காமெடியான, அழவைக்கிற ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்றார் நாசர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT