Published : 09 Oct 2015 11:12 AM
Last Updated : 09 Oct 2015 11:12 AM
'புலி' படத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள் என டி.ராஜேந்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'புலி'. பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 1ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
இயக்குநர் லிங்குசாமி, சமுத்திரக்கனி, இமான், சமந்தா, தமன்னா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தைப் பாராட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தை டி.ராஜேந்தரும் பாராட்டியிருக்கிறார். 'புலி' படம் குறித்து டி.ராஜேந்தர் கூறியிருப்பது:
"இது வழக்கமான தமிழ் படம் இல்லை. சமீப காலத்தில் இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை.
என் பல படங்களுக்கு பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். ஆனால் 'புலி' படத்தின் பிரமாண்ட அரங்குகளைப் பார்த்து பிரமித்துப் போனேன். கிராபிக்ஸ் மிக நன்றாக இருக்கிறது.
கரும்புலி, பேசும் பறவை, ஆமை என்று வித்தியாசமாக படக்குழுவினர் யோசித்து இருக்கிறார்கள். காட்சிகளை அழகாக காட்டி 'புலி' படத்தின் கதையை சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. புதிய விஷயங்கள் நிறைய உள்ளன. 'புலி' படம் நன்றாக இருக்கிறது.
குழந்தைகளுடன் சென்று குடும்பமாக ரசித்து மகிழும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் இந்த படத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என்று அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்.
நான் குடும்பத்துடன் ’புலி’ படத்தை கண்டுகளித்தேன். சிரித்து மகிழ்ந்தோம். சிலர் வேண்டும் என்றே இந்த படத்தைப் பற்றி தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிறார்கள். அவர்கள் ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள் பொறாமை காரணமாக இப்படி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நானே அதற்கான முயற்சிகளில் இறங்குவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
'வாலு' படம் வெளியீட்டு பிரச்சினை ஏற்பட்ட போது, டி.ராஜேந்தர் உடன் இருந்து அப்படம் வெளிவர பெரும் உதவியாக இருந்தவர் தான் 'புலி' தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT