Published : 06 Oct 2015 12:39 PM
Last Updated : 06 Oct 2015 12:39 PM
தங்கள் நிறுவனத்துக்கு கமல்ஹாசன் நன்கொடைத் தொகை எதுவும் தரவில்லை என்று 'பெற்றால்தான் பிள்ளையா' தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
முதல் முறையாக கமல்ஹாசன் ஒரு தனியார் துணிக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த விளம்பரத்தின் மூலம் கிடைத்த தொகையை 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற அமைப்புக்கு அவர் வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.
அச்செய்தியில் விளம்பரத்தின் மூலம் கிடைத்த ரூ.10 கோடி ரூபாயும், மேலும் தனது சொந்த பணத்தில் ரூ.6 கோடி சேர்த்து கமல்ஹாசன் 16 கோடி கொடுத்தார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இச்செய்திக்கு 'பெற்றால்தான் பிள்ளையா' அமைப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
'பெற்றால்தான் பிள்ளையா' அமைப்பின் மேலாளர் வினிதா சித்தார்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்சினைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும்.
அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி விடும். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT