Published : 09 Oct 2015 07:51 AM
Last Updated : 09 Oct 2015 07:51 AM

ஜனநாயக முறைப்படி நடிகர் சங்க தேர்தல்: வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை- சேலத்தில் நடிகர் விஷால் திட்டவட்டம்

‘‘நடிகர் சங்கத் தேர்தலில் இருந்து வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கங்களை போன்று ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கும் தேர்தல் நடந்தாக வேண்டும்’’ என நடிகர் விஷால் தெரிவித்தார்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்க வுள்ளன. இந்நிலையில் இரண்டு அணியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரத் விஷால் அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்ட நடிகர் விஷால் தலைமையிலான நடிகர்கள் நேற்று சேலம் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்தாக வேண்டும். தேர்தலில் வாபஸ் என்ற பேச்சுக்கு இடமில்லை. இந்தத் தேர்தலில் சமரசம் செய்திட பல்வேறு தரப் பினர் முயற்சி மேற்கொண்டுள்ள னர். எங்களைப் பொறுத்தவரை சமரசத்துக்குத் தயாராக இல்லை.

தமிழ் திரையுலகில் தயாரிப் பாளர் மற்றும் இயக்குநர் சங்கங்களில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும்போது, நடிகர் சங்கத் தேர்தலில் மட்டும் தேர்தல் வேண்டாம் என்று கூறுவது ஏன் என்று கேள்வி எழுகிறது. இந்தத் தேர்தலில், ‘பாண்டவர் அணி’ ஒருபோதும் வாபஸ் வாங்க மாட்டோம். எங்கள் அணி கண்டிப்பாக வெற்றிபெறும்.

நான் எனது சொந்த பிரச்சினைக் காக இந்தத் தேர்தலை கொண்டு வரவில்லை. நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியுள்ளேன். அதற்கு முறையான பதில் அளிக்காமல், ‘தேர்தலில் நின்று வெற்றிபெற்று வந்து கேள்வி கேளுங்கள்’ என்று அலட்சியமாக பதில் கூறியதால் தான், தற்போது இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘பாண்டவர் அணி’யைப் பொறுத்தவரை அனைத்து உறுப் பினர்களுக்கும் நன்மை நடந்திட வேண்டும் என்று எண்ணுகிறோம். நடிகர் சங்க இடத்தில் நடிகர் சங்கக் கட்டிடம்தான் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். கமல்சார் மற்றும் குஷ்பு ஆகியோர் எங்கள் அணிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித் துள்ளனர். ஆனால், ரஜினி சாரிடம் தேர்தல் குறித்து கருத்து தெரி விக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.

நடிகர் சிம்பு எங்களை விமர் சனம் செய்துள்ளார். நானும் நடிகர், என்னிடம் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை உள்ளது. எனவே, கேள்வி கேட்கவும், தேர்தலில் போட்டியிட வும் தகுதி உள்ளது. வரும் 18-ம் தேதி நடைபெறும் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் கட் டாயமாக வாக்களிக்க வேண்டும் எனபதுதான் எங்களின் வேண்டு கோள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நடிகர்கள் கருணாஸ், ராஜேஷ், கோவை சரளா, பசுபதி, ரோஹிணி, குட்டி பத்மினி, நந்தா, விக்னேஷ், சாந்தனு உள்ளிட்ட பலர் இருந்தனர்.

வடிவேலு கண்டனம்

மதுரையில் நாடக நடிகர்களை சந்திப்பதற்காக நேற்று மதுரை வந்த நடிகர் வடிவேலு செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது சரத்குமார் அணியினர் சமரசத்துக்கு அழைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சமரசத்துக்கு அழைப்பவர்கள் எதற்காக விஷாலை சாதியை சொல்லி பேச வேண்டும். எதிர்த்து கேள்வி கேட்டால் சாதியை குறிப் பிட்டுச் சொல்வதா?, விஷாலின் வருமானத்தை பற்றி ஏன் பேச வேண்டும். தோல்வி பயத்தால்தான் சமரசத்துக்கு அழைக்கிறார்கள். அதை பாண்டவர் அணி ஏற்காது என்றார்.

முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்க விவகாரத் தில் தலையிடவில்லையே என்ற கேள்விக்கு, கட்சி நடிகர்கள் இந்த கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என முதல்வர் கூறிய தில் இருந்தே இதில் அரசியல் தலையீடு இல்லை என்பது தெளிவாகிறது என்றார்.

ரஜினிகாந்த் உங்கள் அணிக்கு ஆதரவு தருவாரா? என்ற கேள்விக்கு நல்லவர்களுக்கு ஆதரவு தருவேன் என அவர் சொல்லியிருக்கிறாரே என பதில் அளித்தார்.

விஷாலை நரி என்று நடிகர் சிம்பு கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் ஒரு நல்ல கலைஞர், நல்ல கலைஞரின் மகன் இப்படி பேசியிருக்கக் கூடாது என்றார்.

வாக்காளர்களுக்கு விஷால் அணியினர் பணம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு தன் பாக்கெட்டில் கையைவிட்டு துழாவியபடி எங்களிடம் பணம் இல்லையே என்பதுபோல சைகை காட்டினார்.

கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது போல வருகிற சட்டப் பேரவை தேர்தலிலும் பிரச்சாரம் செய்வீர் களா என்று கேட்டபோது, நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை. கடந்த முறை சூழ்நிலை காரணமாக பிரச்சாரம் செய்தேன். இந்த முறை பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றார்.

இந்த தேர்தலில் நிச்சயமாக பாண்டவர் அணி வெற்றி பெறும். காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம் என்றார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால் மற்றும் அவரது குழுவினர். (அடுத்தபடம்) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகிறார் நடிகர் வடிவேலு.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

நடிகர் சங்கத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், சரத்குமார், சிவசாமி ஆகியோரும், துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ், மோகன் குமார், பொன்வண்ணன், சிலம்பரசன், விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

செயலாளர் பதவிக்கு ராதாரவி, விஷால், சிவசாமி ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், கார்த்தி ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, நிரோஷா, பசுபதி, பிரசன்னா, ஸ்ரீமன், தளபதி தினேஷ், உதயா, ராம்கி, ரமணா, கோவை சரளா உட்பட 48 பேர் போட்டியிடுகிறார்கள். வரும் 18-ம் தேதி காலை இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x